நாம் தமிழர் என கட்சி பெயரை வைக்க கூடாது.. இளைஞர்களை ஏமாற்றும் சீமான்... ஆர்எஸ் பாரதி பிளாஷ்பேக்
திருநெல்வேலி: நான் வழக்கு தொடர்ந்தால் சீமான் கட்சியே நடத்த முடியாது. நாம் தமிழர் கட்சியை சிபா ஆதித்தனர் திமுகவுடன் இணைத்துவிட்டு அமைச்சராகிவிட்டார். இப்போது நாம் தமிழர் என்ற கட்சி பெயரை வைக்க கூடாது என்று திமுகவின் ஆர்எஸ் பாரதி பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருநெல்வேலி ஜோதிபுரம் திடலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
புதிது புதிதாக கட்சிகளை ஆரம்பித்து பேசி வருகின்றனர். சீமானுக்கு யோகிதம் இருந்தால் இந்த கூட்டத்திலேயே சொல்லிவிட்டு போகிறேன். ஒருவருக்கு பிறந்திருந்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்று கேட்டால் சீமான் தமிழக இளைஞர்களை ஏமாற்றி வருகிறார்.
அவரது கட்சிக்கு நாம் தமிழர் என்று பெயர் வைத்திருப்பதே பொய்யானது. சட்டப்படி பார்த்தால் அந்த பெயரை வைக்கவே கூடாது. இங்கிருக்கும் மூத்தவர்கள், 1967 ல் கட்சியில் இருந்தவர்களுக்கு எல்லாம் தெரியும். இதே பகுதியிலேயே தான் சிபா ஆதித்தனார் நாம் தமிழர் கட்சியை தொடங்கி நடத்தினார். 1967 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியிலேயே திமுக ஆதரவுடன் போட்டியிட்டார். அப்போது வரை நாம் தமிழர் கட்சி இருந்தது.
அதற்கு பின்னால் அவரை சபாநாயகராக அண்ணா அமர்த்தினார்.கருணாநிதி முதல்வரானதும் 1969ல் சபாநாயகராக இருந்த சிபா ஆதித்தனார் நாம் தமிழர் கட்சியை திமுகவில் இணைத்துவிட்டார். கட்சி கலைக்கப்பட்டு விட்டது. நாம் தமிழர் கட்சியே கிடையாது. காரணம் நாம் தமிழரை தொடங்கிய சிபா ஆதித்தனார் அதனை கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்து அமைச்சராகிவிட்டார்.
அதற்கு பின்னால் ஏமாற்றி அந்த கட்சியின் பெயரை வைத்து கொண்டுள்ளார் சீமான். சட்டப்படி நான் வழக்கு தொடர்ந்தால் அந்த கட்சியின் பெயரே இருக்காது. என் கை கொஞ்சம் ஆபத்தான கை. நான் வழக்கு போட்டால் அவரால் வெளியே வரவே முடியாது. நான் நீதிமன்றம் சென்று ஏமாற்றி இந்த பெயரை வைத்துள்ளதாக வழக்கு போட்டால் அவ்வளவு தான்’’ என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications