சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!
நெல்லை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். நெல்லை மாவட்டத்தின் அத்தனை தொகுதிகளிலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளேன் என்று கூறிய நயினார் நாகேந்திரன், எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி மாறப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கு நெல்லை தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்த மக்களைவிட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார். இருந்தாலும் நயினார் நாகேந்திரன் ஜாதகம் மற்றும் சென்டிமென்டில் நம்பிக்கை கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே 2006 மற்றும் 2016 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார். இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்து வந்தார். இதனிடையே முதல்வர் ஸ்டாலின் இம்முறை நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் தோற்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் யாரும் பதவியில் இருக்க மாட்டீர்கள் என்று நேரடியாகவே வார்னிங் கொடுத்தார். இதனால் நயினார் நாகேந்திரனை வீழ்த்த அத்தனை பணிகளையும் திமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இதற்கு பாஜக தலைமையும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் சாத்தூர் தொகுதிக்கு மாறப் போவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். அதில் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதி மக்கள் 5 முறை சட்டசபைக்கும், ஒரு முறை நாடாளுமன்றத்திற்கும், சில நேரங்களில் நான் வாக்கு கேட்காமலேயே 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அளித்துள்ளனர்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரிய பெரிய தலைவர்கள் கூட தொகுதி மாறி இருக்கிறார்கள். கருணாநிதி குளித்தலை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அதற்காக அவர்களுடன் நான் என்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்ட தொகுதிகளில் நல்ல வாக்குகளை வாங்கி இருக்கிறேன். எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications