கேஸில் மாட்டிக்கிட்ட சுர்ஜித்தின் அப்பா.. நெல்லை கவின் வழக்கில் ஜாமீன் கிடைக்குமா? இன்று விசாரணை
திருநெல்வேலி: நெல்லையில் சாப்ட்வேர் என்ஜினியர் கவின் கொலை நடந்தபோது, வழக்கில் கைதான சுர்ஜித்தின் அப்பாவும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் சம்பவ இடத்தில் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது என்று ஹைகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனால் சுர்ஜித்தின் அப்பாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் தருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கேடிசி நகர் பகுதியில் கடந்த ஜூலை 27ம் தேதி நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை தந்துவிட்டது.

தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (25) என்பவரை, நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர், தன்னுடைய அக்காவுடனான காதலை கைவிட வலியுறுத்தி அரிவாளால் வெட்டி ஆணவக்கொலை செய்தார்.
நெல்லை கவின் கேஸ்
இதனைத்தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை போலீசில் சரணடைந்தார். போலீசாரும் திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித்தை ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சுர்ஜித்தின் அப்பாவான உதவி சார்பு காவல் ஆய்வாளர் சரவணனையும் போலீசார் கைது செய்தனர். சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில், சுர்ஜித்தின் உறவினர் ஜெயபாலன் என்பவரை 3வதாக கைது செய்தனர். மேலும், சுர்ஜித்தின் அம்மாவும், காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கவினின் அப்பா சரவணன், ஜெயபாலன் இருவரும் தனித்தனியாக கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரணை செய்த நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சுர்ஜித் அப்பாவுக்கு ஜாமீன் கிடைக்குமா
உடனே சரவணன், மதுரை அமர்வில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கொலை சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை கொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர கொலை சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 30-ம் தேதியிலிருந்து சிறையில் உள்ளேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு நவம்பர் 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, "மனுதாரர் ராஜபாளையம் பட்டாலியனில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று மனுதாரர் பணியில் இருந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அதோடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.
இன்று மீண்டும் விசாரணை
இதற்கு சிபிசிஐடி தரப்பில். "மனுதாரர் சம்பவம் நடந்த நாளில் பணியில் இல்லை. விடுமுறையில் இருந்திருக்கிறார். கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மனுதாரர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிடப்பட்டது.
கொலையான கவின் தாயார் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "மனுதாரரின் தலையீடு காரணமாக எனது புகார் தாமதமாகவே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கில் கூடுதல் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வேண்டும்" என்று கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவம்பர் 27க்கு நீதிபதி தள்ளிவைத்தார். அந்தவகையில்,. இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications