அண்ணன் என்னடா தம்பி என்னடா? சீமானுக்கு தொடர்ந்து கல்தா கொடுக்கும் தம்பிகள்! அந்த கட்சியில் ஐக்கியம்
நெல்லை: திருப்பூர், கோவை, சேலம் மாவட்ட நிர்வாகிகளை தொடர்ந்து நெல்லையிலும் கூண்டோடு விலகி இருக்கின்றனர் நாம் தமிழர் கட்சி தம்பிகள். அதுமட்டுமல்லாமல் சீமான் தனது அரசியல் எதிரி என நேரடியாக குறிப்பிடும் திமுகவிலேயே, நாம் தமிழர் கட்சியினர் மொத்தமாகச் சேர்ந்திருப்பது கட்சி தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் புயல் வீசி வருகிறது. குறிப்பாக விஜய் வரவுக்குப் பின் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கொத்துக் கொத்தாக விலகி வருகின்றனர். தன்னைத் தவிர கட்சியில் வேறு யாரும் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் சீமான் உறுதியாக இருப்பதாகக் கூறி விலகல் தொடர்கிறது.

மேலும் காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோர் குறித்து சீமான் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரங்கள் அக்கட்சியில் புயலை கிளப்ப அணி அணியாக கட்சியை விட்டு கிளம்பி வருகின்றனர் தம்பிகள்.
அந்த வகையில், சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர். ஏற்கனவே காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் குறித்து சீமான் பேசிய ஆடியோ வெளியிட்ட நிலையில், அவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்களை தொடர்ந்து, கடந்த சில வாரங்களில் சேலம் மாவட்ட நிர்வாகிகளும் அடுத்து நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினர். சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம் ஆகியோர் விலகினர்.
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர். வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில் அடுத்த கட்சி தாவல் நிகழ்வு நெல்லையில் அரங்கேறி இருக்கிறது.

நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் கண்ணன் தலைமையில் இளைஞர் பாசறை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பார்வின், குருதி கொடை பாசறை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட 30 நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர். இவர்கள் தங்கள் ஆதரவாளர்கள், மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 100 பேருடன் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
ஏற்கனவே கோவை நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மொத்தமாக விலகி திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் தற்போது நெல்லையிலும் நாம் தமிழர் கட்சி தம்பிகள் சீமானுக்கு விடை கொடுத்துவிட்டு திமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் காலங்களில் பல மாவட்டங்களில் இருந்து நாம் தமிழர் கட்சி தம்பிகள் கொத்துக் கொத்தாக விலகி திராவிட கட்சிகளில் ஐக்கியமாவார்கள் என்கின்றனர் மூத்த தம்பிகள்.













Click it and Unblock the Notifications