நயினார் நாகேந்திரன் கனவுக்கு ‘வேட்டு’ வைத்த போஸ்டர்கள்.. சீட் கொடுத்தால் பாஜக படுதோல்வி உறுதியாம்!
நெல்லை: வரும் லோக்சபா தேர்தலில் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு சீட் கொடுத்தால் பாஜக படுதோல்வி அடையும் என எச்சரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலில் போட்டியிட முக்கிய கட்சிகளில் சீட் பெற பலரும் முயன்று வருகின்றனர். பாஜகவில் சிட்டிங் எம்.எல்.ஏவான நயினார் நாகேந்திரன், எம்.பி தேர்தலில் போட்டியிட ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் தவிர்க்க முடியாத தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத் தலைவராகவும், பாஜக சட்டமன்ற குழு தலைவராகவும் உள்ளார். நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
நெல்லை தொகுதியில் நல்ல செல்வாக்குடன் இருக்கும் தான், இந்த முறை நின்றால், நிச்சயம் வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் நயினார் நாகேந்திரன், அதன் பிறகு மத்திய அமைச்சர் ஆகும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியிலும், தனக்கு என்றால் சீட் மறுக்கப்படாது என்ற நம்பிக்கையில் நயினார் நாகேந்திரன், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏவாக இருக்கும் தனக்கு சீட் மறுக்கப்பட்டால் தனது மகன் நயினார் பாலாஜிக்கு சீட்டை பெறும் எண்ணத்திலும் இருக்கிறாராம்.
இந்நிலையில் தான் நயினார் நாகேந்திரனுக்கு கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில், அவருக்கு எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் சுவர் சுவராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜா சார்பில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில், "புறக்கணிக்காதே..! புறக்கணிக்காதே..! வெள்ளாளர்களை புறக்கணிக்காதே! பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர் சமுதாயத்தை பாஜக புறக்கணிக்கிறதா? நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட்டா? வெள்ளாளர்களே விழித்து கொள். திருநெல்வேலி எம்.பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும், எச்சரிக்கிறோம்." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் தேர்தல் பணியாற்றி வரும் நயினார் நாகேந்திரனுக்கு, நெல்லை எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications