பிரியாணி கடை விளம்பரத்தில் விநாயகர் படம்.. கொந்தளித்த இந்து முன்னணியினர்.. கடை உரிமையாளர் கைது
நெல்லை: திருநெல்வேலியில் பிரியாணி கடை விளம்பர பேனரில் விநாயகர் படத்தை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் தூத்துக்குடி சாலையில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பர பேனர் வைக்கப்பட்டது. அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன.

வேற்று மதத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் வைத்திருந்ததாக கூறப்படும் இந்த விளம்பர பேனரில், விநாயகர் தொடர்பான காட்சியை பயன்படுத்தி பிரியாணி விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரியாணி கடை முன்பாக திரண்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விளம்பரம் அமைந்துள்ளதாகக் கூறி, பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல்துறையினர், சம்பந்தப்பட்ட விளம்பர பேனரை அகற்றினர்.
மேலும், விளம்பரம் தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துமுன்னணி நிர்வாகிகளிடம் காவல்துறையினர் உறுதியளித்தனர்.
இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் நரசிங்கநல்லூரைச் சோ்ந்த செல்வராஜ் என்பவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளரான கேடிசி நகரைச் சோ்ந்த முருகையா மகன் ஜெயந்த் (30) என்பவரை கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
