அரசியலுக்கு வரவங்க எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? அட்டாக்கை ஆரம்பித்த அதிமுக வளர்மதி
திருவள்ளூர்: அரசியலுக்கு புதிதாக வருகிறவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா. யார் வந்தாலும், யார் போனாலும் அதிமுகவின் வாக்கு வங்கி குறையாது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியுள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், பேஸ்மட்டமே ஆடிக் கொண்டு இருக்கிறது. அது எப்போது உடையும் என்று நமக்கு தெரியாது. கூட்டணி என்று கூறி பயம் காட்டாதீர்கள். 2026 தேர்தல் வருவதற்குள் எத்தனைக் கட்சிகள் தடுமாற்றம் ஆகப் போகிறது என்று பாருங்கள். எதிர்க்கட்சியில் பேசுவோரெல்லாம் சொல்கின்றனர் நிறைய கட்சிகள் அரசியலுக்கு வருகின்றனர். இதனால், அதிமுகவின் வாக்கு வங்கி மிகவும் குறைந்துவிடும் என்கின்றனர்.

யார் வந்தால் என்ன.. யார் போனால் என்ன.. எம்ஜிஆர் ஓட்டு இருக்கிறது, ஜெயலலிதாவின் ஓட்டு இருக்கிறது, எடப்பாடியின் ஓட்டு இருக்கிறது. அதுபோக பொதுமக்களின் ஓட்டு எங்களுக்கு இருக்கு. 4 தரப்பு ஓட்டுக்கள் எங்களுக்கு இருக்கின்றன. அதனால், வாக்கு வங்கியைப் பற்றி அதிமுக ஒருபோதும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அரசியலுக்கு வருகிறவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியமா.
எம்ஜிஆர் அப்படிப்பட்ட அரசியலையா நடத்தினார். மக்களின் மனதில் குடிகொண்டிருந்தார் எம்ஜிஆர். எல்லோரும் அரசியலுக்கு வரலாம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் போய்விட்டது. திமுக ஆட்சியானது ஒரு குடும்ப ஆட்சி. அவர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலையே இல்லை. நாட்டில் போதை, கஞ்சா, கள்ளச்சாராயம் அனைத்தும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கொலைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன அதற்கு மிக முக்கிய காரணம் போதைப் பொருள்கள்தான். நல்ல சாராயத்தில் போதை இல்லை அதனால் கள்ளச்சாராயம் குடிக்கிறேன் என்று கூறி பலர் உயிரை இழந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போதைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதைப் பெரிய வேடிக்கை ஒன்றை நாளிதழில் பார்த்தேன்.
தீபாவளிக்கு தெருவுக்கு தெரு தற்காலிக கடை என்ற பெயரில் மதுக்கடைகளைத் திமுகவினர் திறக்கின்றனராம். எத்தனை பேர் உயிரிழக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை. தாய்மார்களைத்தான் ஏமாற்றுவார்கள் திமுகவினர். அவர்கள் கூறுவது எதையும் நம்பாதீர்கள். கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை சும்மா கொடுத்த அரசு என்றால் பொம்மை முதலமைச்சரான ஸ்டாலின் அரசாகத்தான் இருக்கும்.
இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா.. இந்த ஆட்சியை மாற்றி மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் எடப்பாடியாரின் ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும். திமுக மிகவும் பலமான கூட்டணி, அதிமுகவுக்கு கூட்டணி இல்லை அவர்கள் மட்டும்தான் இருக்கின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். கூட்டணி கட்சியே இல்லையே எப்படி ஆட்சியை பிடிப்பீர்கள் என்று ஒருமுறை ஜெயலலிதாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறினார் எங்களிடம் கூட்டணி இல்லையா, யார் கூறியது, எங்களிடம் பலமான கூட்டணி உள்ளது. மக்கள் கூட்டணி எங்களிடம் உள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications