மீண்டும் மாற்றம்.. முன்னேற்றம்.. 2026ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி! அன்புமணி திட்டவட்டம்!
திருவள்ளூர்: 2026ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வியூகத்தை இப்போதே அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் மீண்டும் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவுள்ளரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.

பாமக தலைவர்
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரான பிறகு நிற்க நேரமின்றி பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். தருமபுரி, அரியலூர் மாவட்டங்களில் நடைபயணம் சென்று மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருப்பதோடு தொடர்ந்து நிர்வாகிகள் சந்திப்புகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடி பகுதியில் பாமக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

பாமக தலைமையில் ஆட்சி
அப்போது மிகத் திட்டவட்டமாக 2026ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு எனக் கூறினார். வரும் தேர்தல்களில் திமுக, அதிமுக கூட்டணியில் ஏதேனும் ஒன்றில் பாமக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை திடமாக மறுக்கும் வகையில் பேட்டி கொடுத்திருக்கிறார். மேலும், பாமக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வியூகத்தை இப்போதே அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கூட்டணிக் கணக்கு
அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாமக தலைமையில் தான் ஆட்சி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருப்பதன் மூலம் மீண்டும் மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்தை அவர் முன்னெடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வட தமிழகத்தில் தனது சுற்றுப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் இன்னும் தீவிரப்படுத்துவார் எனத் தெரிகிறது.

அதிமுக பாஜக
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் அதிமுகவும், பாஜகவும் ஆர்வமுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராமதாசும், அன்புமணியும் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications