ஆடுகள் வளர்க்க ஆசையா? 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழிக்குஞ்சுகள்.. திருவள்ளூரில் தித்திப்பு தகவல்
திருவள்ளூர்: ஆடு, கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பதற்காக, அரசு தரப்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாட்டுக் கோழிக்குஞ்சுகள், ஆடுகள் வளர்க்க ஆர்வமுள்ளவர்களுக்காகவே திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தவும் மத்திய அரசு உதவிகளை செய்து வருகிறது. அதன்ஒருபகுதியாக கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது..

இதில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து ஆடு வளர்ப்புக்கான திட்டத்தையும் அரசு முன்னெடுத்து வருகிறது. ஆடு வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
விவசாயிகள்: அதன்படி, விவசாயிகள் 100 ஆடுகள் முதல் 500 ஆடுகள் வரை வளர்க்கலாம். இதில், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் கிடைக்கும். 100 ஆடுகளை வளர்க்க, ரூ.20 லட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 2 முறை தலா ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.. 200 ஆடுகளை வளர்ப்பதற்கு ரூ.40 லட்சமும், 300 ஆடுகளுக்கு ரூ.60 லட்சமும், 400 ஆடுகளுக்கு ரூ.80 லட்சமும், 500 ஆடுகளை வளர்க்க ரூ.1 கோடி திட்டமும் உள்ளது.. இவை அனைத்திற்குமே 50 சதவீதம் தள்ளுபடி உண்டு..
இதுபோலவே, கோழி, பன்றிகள் வளர்ப்பிற்கும் மானியம் வழங்கப்படுகிறது. இதில் நிலமற்ற லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகிறார்கள். தமிழகத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, 50 சதவீதம் மானியம் மூலம் கால்நடைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அதிரடி அறிவிப்பு: இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டுக் கோழிக்குஞ்சுகள் (ஒருவருக்கு 40 கோழிக் குஞ்சுகள்) 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தலா 100 பயனாளிகள் வீதம் 1,400 பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள்: இதில், தோ்வு செய்யப்படும் பயனாளி ஏழ்மை நிலையிலுள்ள பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் பயனாளி அந்தக் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அதேசமயம், முந்தைய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது.
பயனாளி: மேலும், தோ்வு செய்யப்படும் பயனாளி ரூ.3,200 சொந்த செலவில் நாட்டுக் கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்திடும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். நாட்டுக் கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்து, அதற்கான சுயசான்றுடன் கூடிய ரசீது சமா்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீத மானியத் தொகையாக ரூ.1,600 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நெறிமுறைகளின்படி இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகே உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு, இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தி அதிகரிப்பதை இலக்காக கொண்டு அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு இந்த திட்டம் பெரிதும் உதவி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications