கூட்டணிக்காக எங்களை மிரட்டினாங்க! தேமுதிக வங்கி கணக்கை முடக்கினாங்க! பாஜக மீது பிரேமலதா பரபரப்பு
திருவள்ளூர்: தேமுதிகவின் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என பாஜக மிரட்டியதாக பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் 40 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, கூட்டணி வெற்றிக்காக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகரில் போட்டியிட்டாலும் பிரேமலதா, மற்ற வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் திருவள்ளூர் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருந்தேன். இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எத்தனையோ பேர் பல வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
3-ஆவது முறையாக அதிமுக வென்றிருந்தால் சரித்தர சாதனையாக இருந்திருக்கும். எனவே இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. 2021 ஆம் ஆண்டு பெற வேண்டிய வெற்றியை 2026 ஆம் ஆண்டு பெறுவோம். அது சரித்திர வெற்றியாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம்.
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன் பாஜக சார்பில் எங்களுக்கு நிறைய நிர்பந்தம் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதாவை போல் நானும் துணிச்சலாக முடிவெடுத்தேன். இந்த முறை கூட்டணி அதிமுகவுடன்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த மக்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.
எத்தனையோ நிர்பந்தங்கள் எங்களுடைய வங்கிக் கணக்கையும் முடக்கினார்கள். எங்களை பயமுறுத்தினார்கள். நாங்கள் பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். எத்தனையோ சோதனை, எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்திருக்கிறோம். ஊழலுக்கு அப்பாற்பட்டு சிறந்த நாடாளுமன்ற எம்பியாக நல்லத்தம்பி கடமையாற்றுவார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். நாடாளுமன்றம் , சட்டசபை ஆகிய தேர்தல்களில் இருவரும் சேர்ந்து நிதி ஒதுக்கி இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications