அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு பதில் ‘அருணாச்சலம்’ பெயர் பலகை.. நடத்துநர் சஸ்பெண்ட்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு பதிலாக 'அருணாச்சலம்' என்ற பெயர் பலகை வைத்ததாக விஜயராகவன் என்ற அரசுப் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை பேருந்துகளில் 'அருணாச்சலம்' என பெயர் மாற்றப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள். தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகத்தின் டூர் பேக்கேஜில் திருவண்ணாமலைக்கு பதிலாக 'Arunachalam' என்று குறிப்பிட்டிருந்தனர் அதேபோல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ' Arunachalam' என்று குறிப்பிடப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த பெயர் மாற்றத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது பேருந்தில் அந்த பெயர் நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், பெயர்ப்பலகைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலம் என்ற பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டு திருவண்ணாமலை என்ற பெயருடனேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு டெப்போவில் இருந்து, ஜூலை 15 ஆம் தேதி பெங்களூர் சென்ற அரசு பஸ் எல்.இ.டி., திரையில், திருவண்ணாமலை என்பதற்கு பதிலாக அருணாச்சலம் என பெயர் இடம்பெற்றது. இது தொடர்பாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜயராகவனை சஸ்பெண்ட் செய்து, அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் ஜெயசங்கர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications