மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா மாசி மகம் நாளில் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலை: மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கணவரின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் துர்கா ஸ்டாலின்.
துர்கா ஸ்டாலின் அண்ணாமலையார் கோயில் வருகையை அடுத்து மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.கம்பன் மற்றும் திரளான திமுக நிர்வாகிகள் அவர்களை வரவேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார்.

மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி, சனீஸ்வரன் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின். அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார் மு.க ஸ்டாலின். இந்த முறை எப்படியும் வென்று ஆளுங்கட்சியாக முதல்வர் அரியணையில் மு.க ஸ்டாலின் அமரவேண்டும் என்பது திமுக தொண்டர்களின் கனவாகும்.

சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது திமுக. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
தொகுதிவாரியாக ஸ்டாலின் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் நிலையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மாநிலம் முழுவதும் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கணவரின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
