தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் அபிஷேக் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் தேதியை கூட மறந்து தவறாக கூறிய சம்பவம் நடந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் களமிறங்கி உள்ளார்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக அபிஷேக் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 30. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்பிஏ படித்துள்ளார். தவெக செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார்.
இளைஞர்கள் அதிகமாம்
தற்போது அபிஷேக் போளூர் தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''தவெக சார்பில் போளூர் தொகுதியின் வேட்பாளராக என்னை விஜய் அறிமுகப்படுத்தி உள்ளார். நான் இந்த தொகுதியை ரொம்ப நாளாக ஃபாலோ செய்து கொண்டு தான் இருக்கிறேன். தொகுதியில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். நானும் இளைஞர் தான்.
தேர்தல் தேதியில் தவறு
தொகுதியின் மேம்பாட்டுக்காக தான் நாங்கள் இங்கே வந்துள்ளோம். விஜய் சொல்வது போல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று திமுக.. இன்னொன்று தவெக.. இங்க களத்தில் திமுகவும் இல்லை. அதிமுகவும் இல்லை. களத்தில் ஏற்கனவே நாம் ஜெயித்துவிட்டோம். இது எல்லோருக்கும் தெரியும். இந்த வெற்றியை உறுதி செய்ய வேண்டியது தான் மீதம் உள்ளது. 24ம் தேதி போய் கரெக்டா வாக்களித்து வெற்றியை உறுதி செய்வோம்'' என்றார்.
தேர்தல் எப்போது?
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் இந்த அபிஷேக் தேர்தல் தேதியை ஏப்ரல் 24 என்று கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த பேட்டியின்போது அவரிடம், ''உங்களின் சொந்த ஊர் எது?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''எனக்கு இங்கு தான் பூர்வீகம். எங்க அம்மாவின் ஊர் திருவண்ணாமலை. நாங்க ஜெயிட்டோம். நாங்க இங்கே தான் இருக்கப்போகிறோம். ஏன் பிரித்து பேசுகிறீர்கள்?''என்றார்.
2021ல் வென்றது யார்?
இந்த போளூர் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் டிபி சரவணன், பாமக சார்பில் சிஆர் பாஸ்கரன், நாம் தமிழர் சார்பில் உமாதேவி பிரகாஷ், தவெக சார்பில் அபிஷேக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி 97,732 ஓட்டுகள் பெற்றார். திமுக வேட்பாளர் கேவி சேகரன் 88,007 ஓட்டுகள் வாங்கினார். இதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 9725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் 10,197 வாக்குகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார்.












Click it and Unblock the Notifications