அரிசி ஏற்றுமதிக்கு தடை.. அமெரிக்காவில் அடிதடி.. ஆரணியில் தேங்கிய மூட்டைகள்.. விலை குறையுமா
திருவண்ணாமலை: அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்கெட்டுகளில் அரிசி வாங்க அடிதடியே நடக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரைஸ்மில்களில் அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அரிசி விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரிசி முக்கியமான உணவுப்பொருள். புழுங்கல் அரிசி, பச்சரிசி, இட்லி அரிசி போன்றவைகள் அதிக அளவில் தென்னிந்திய மக்களால் உணவுக்காக வாங்கி உபயோகிப்படும். ஒரு நேரமாவது அரிசி சோறு சாப்பிட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். தென்மேற்கு பருவமழை ஒரு பக்கம் பெருவெள்ளமாக கொட்டி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலோ மழையில்லாமல் விவசாயம் பொய்த்து போய் விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நடப்பாண்டு அரிசி தட்டுப்பாடு வந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் அரிசி வாங்குவதற்காக ஏராளமான மக்கள் சூப்பர் மார்கெட்டுகளில் வரிசையில் நின்று அள்ளிச்சென்றனர். இதனால் பல கடைகளில் அரிசி மூட்டைகள் காலியாகி விட்டது. 40 மைல் தூரம் பயணம் செய்து அரிசி வாங்கி வந்ததாகவும் அரிசியின் விலை இருமடங்காக உயர்ந்து விட்டதாகவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பல முக்கிய ஊர்களில் உள்ள ரைஸ்மில்களில் அரிசி மூட்டைகள் தேங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து மட்டும் 20 சதவீத அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 5 சதவீதம் ஆரணியில் இருந்து ஏற்றுமதியாகிறது. சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஆரணி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கபட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது. ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பொன்னி, பிடிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரக அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 50 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது அரிசி மூட்டைகள் அனைத்து தேக்கமடைந்துள்ளதாக ரைஸ்மில் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆரணி, களம்பூரில் ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கடந்த ஒருவாரத்தில் 5சதவிகிதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ரைஸ்மில் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதே நிலை நீடித்தால் தொழில் முழுமையாக பாதிக்கும். அரிசி மூட்டைகள் தேங்கியுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. மற்றும் சீராக இருக்கும். அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும் என்பதும் ரைஸ்மில் உரிமையாளர்களின் வேண்டுகோள் ஆகும். தற்போது அரிசி விலை கிலோவிற்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில் தேக்கம் காரணமாக விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் விவசாயிகள் கோரிக்கையோ வேறு மாதிரியாக உள்ளது. அரிசி ஆலைகள் தொடர்ந்து உற்பத்தியை குறைத்தால் நெல் மூட்டைகள் தேங்கும். நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படும் என்பது விவசாயிகளின் கவலையாகும். ஏற்றுமதிக்கு தடைநீங்கும் வரை நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும். மேலும் நெல் விலையும் குறையும் என்று சொல்கின்றனர். விவசாயம் சம்பந்தபட்ட மூல பொருட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நாடு ஒருபோதும் அரிசி நெருக்கடியை சந்திக்காது. அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications