திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. குவியும் பக்தர்கள்.. தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோயிலில் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா, தீபமும் ஏற்றப்பட்டு வந்தது.

tiruvannamalai karthigai deepam

தீபத் திருவிழாவின் 10 ஆம் நாளான இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கோவில் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அங்குச் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும்.

அண்ணாமலையார் கோயில் கருவறையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை பக்தர்கள் காணும் வகையில் கோயிலுக்கு உள்ளே 7,500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பரணி தீபத்தை காணுவதற்கான அனுமதிச் சீட்டை பெற்றுள்ளவர்கள், அதிகாலை 2.30 மணி முதல் கோயிலில் அனுமதிக்கப்பட்டனர். பரணி தீபத்தைக் கண்டால் புண்ணியம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.

இன்று மாலை மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. நேற்றைய தினம் கனமழை கொட்டிய நிலையில், மகா தீப கொப்பரைக்குக் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மா என்று இந்த மகா தீப கொப்பரை மூன்று அடுக்குக் கொண்டதாக உள்ளது. பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட இந்த கொப்பரையில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளால் திரி பயன்படுத்தி இன்று மாலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதிலும் மலையின் உச்சிக்குச் சென்று தரிசிக்க 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்வதற்கு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், திருவண்ணாமலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து வசதி மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல, கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் தீபர் தலைமையிலான இரண்டு பெண்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளனர்.

தீபத் திருவிழாவைக் காண வரும் பக்தர்கள் வசதிக்காக பேருந்து, தங்குமிடம், உணவு, குடிநீர் என பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல, கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்துவிடக் கூடாது என்பதால் குழந்தையின் பெயர், முகவரி, பெற்றோரின் தொலைபேசி எண் ஆகியவை அடங்கிய டேக் ஒன்று குழந்தைகளின் கையில் போலீஸார் கட்டி வருகின்றனர். கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போனால் அவர்களை இந்த டேக் மூலம் எளிமையாகக் கண்டறியலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+