தமிழ்நாட்டையே அதிரவைத்த திருவண்ணாமலை கொள்ளை.. டிஜிபியிடம் இருந்து பறந்த உத்தரவு.. அதிரடி 'ஸ்கெட்ச்'
திருவண்ணாமலையில் வெல்டிங் மிஷினை வைத்து நான்கு ஏடிஎம்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணியை பார்ப்போம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வெல்டிங் மிஷினை வைத்து நான்கு ஏடிஎம்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியை இப்போது பார்ப்போம்.
பிப்ரவரி 12ம் தேதி அதிகாலை திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தம்மாம்பட்டு சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் அதே பாணியில் சுமார் 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
போளூர் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள எஸ்பிஐ ஏடிம் மையத்தில் இயந்தியரத்தை வெட்டி எடுத்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகையில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்மிலும் வெல்டிங் மிசினை வைத்து உடைத்து 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

போலீசுக்கு சவால்
கொள்ளை சம்பவம் எப்படி வெளியே தெரிந்தது. நா ன்கு ஏடிஎம் மையங்களில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே கொள்ளை நடந்தது குறித்து போலீசுக்கு தெரியவந்துளளது. நான்கு இடத்திற்கும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த நான்கு இடங்களிலும் கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் சிசிடிவி கேமராக்கள் மற்றும ஹார்ட் டிஸ்குகள் எரிந்ததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சவால் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர பதிவெண்
இந்த கொள்ளை தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநில பதிவெண் கொண்ட வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச்சென்றதால் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளன.

யார் செய்தார்கள்
தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கொள்ளை சம்பவம் குறித்து கூறும் போது, "வெல்டிங் மிஷினை பயன்படுத்தி குறிப்பிட்ட சில ஏடிஎம்களை குறி வைத்து கொள்ளை நடந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. டெக்னாலஜி அடிப்படையில் சில டேட்டாக்கள் கிடைச்சிருக்கு. எத்தனை பேர் இந்தி திருட்டில் ஈடுபட்டாங்கன்னு சொல்ல முடியாது. ஆனால் கும்பலாகவே இதை செஞ்சுருக்கான்னு தெரியுது. பாதுகாப்பு கோளாறு குறித்து விசாரித்து வருகிறோம். ஏடிஎம் எப்படி செயல்படும் என்கிற விஷயம் நல்லா தெரிஞ்சவங்கதான் இந்த கொள்ளை சம்பவத்தை பண்ணியிருக்க முடியும். மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதே முறையில் ஏடிஎம் திருட்டு நடந்திருக்கு என்றார்.

அதிரடி ரெய்டு
கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. போளூர் சாலையில் வெள்ளை நிற டாடா சுமோவில் இறங்கிய நபர் எஸ்பிஐ ஏடிஎம்க்குள் நுழையும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்கள் தப்பிக்காமல் இருப்பதாக, ஆந்திரா, கர்நாடகா மாநில காவல்துறையுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் உள்ள தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தனியார் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா சம்பவம்
இந்த கொள்ளை சம்பவம் போன்றே கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களிலும் வெல்டிங் மிஷினை வைத்து கொள்ளை அடித்து சென்றதாகவும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான காட்சிகளும், இந்த கொள்ளை சம்பவ காட்சிகளும ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களை பார்க்கும் போது ஹரியான கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு தனிப்படைகள் ஹரியானாவிற்கு பறந்துள்ளது.

வடமாநில கும்பல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மிஷினால் உடைத்து 9 கிலோ தங்க நகைகளை வடமாநில கும்பல் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய நிலையில் மீண்டும் ஒரு வடமாநில கும்பல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெல்டிங் மிஷினால் கொள்ளையடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வேலூரில் 2016ல் இதேபாணியில் கொள்ளை சம்பவம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications