பெளர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா?. உகந்த நேரம் இதுதான்.. நோட் பண்ணுங்க
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான சரியான நேரம் குறித்து அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னிக்கு உரிய தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். இந்தக் கோவிலை ஒட்டி அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலை உள்ளது.

இங்கு கிரிவலம் சென்றால் அண்ணாமலையாரின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த அண்ணாமலையார் மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பௌர்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த மலையை வலம் வருவது சிவனையே வலம் வருவதற்குச் சமம் என்பதால் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் காலணி அணிவதே இல்லை. இந்த மலை மீது பக்தர்கள் ஏறிச் செல்வதற்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பௌர்ணமி வருகிற 10- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.32 மணிக்குத் தொடங்கி மறுநாள் 11 ஆம் தேதி (புதன்கிழமை) மதியம் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.
பௌர்ணமிக்கு முந்தைய நாளான இன்று 9 ஆம் தேதி வைகாசி விசாகம் என்பதால் இன்றைய தினத்தில் இருந்தே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கிரிவலம் செல்ல வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications