திருவண்ணாமலை அரசு கல்லூரி பெண்கள் கழிவறையில் இப்படியா? லேடீஸ் டாய்லட்டில் நெளிந்த பாம்புகள்.. வீடியோ
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு கல்லூரியின் கழிவறையில் பாம்புகள் சாரை சாரையாக நெளிந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், உடனடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.. இந்த கல்லூரியில் காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்டாக சுமார் 8000 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்..

அரசு கல்லூரி: இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பயன் பாடின்றி உள்ளதாக தெரிகிறது. இந்த கழிவறையில் சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் நெளிந்து கொண்டிருப்பதை கண்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள்.. இதை பற்றி மற்ற மாணவர்களிடம் இது குறித்து அதிர்ச்சியுடன் சொல்லி உள்ளனர்.
இதையடுத்து, சில மாணவர்கள் கழிவறைக்கு சென்று, பாம்புகள் இருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்... இந்த வீடியோவை பார்த்த அனைவருமே பதறிப்போய்விட்டார்கள்.
தீயணைப்பு வீரர்கள்: உடனடியாக கல்லூரி நிர்வாகம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்புபுடி நபர்களை கொண்டு கழிவறையில் பாம்புகளை தேடியுள்ளனர். அப்போது சில பாம்புகள் மட்டும் பிடிபட்டதாகவும், மற்ற பாம்புகளை தேடி வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கலைவாணி சொல்லும்போது, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஏற்கனவே ஒரு பாம்பு பிடிக்கப்பட்டுவிட்டதாகவும், கழிவறையை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதி தந்துள்ளார்..
கழிவறை: அதுமட்டுமல்லாமல், கல்லூரி வளாக மைதானத்தில் தூய்மை பணி செய்யும்போது, சுற்று சுவர் ஒட்டியுள்ள கழிவறையில் பாம்புகள் புகுந்துள்ளதாகவும், கழிவறையின் பின்புறமுள்ள புதர்களை அகற்றவும், பாம்புகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் முதல்வர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அரசு கல்லூரி பெண் கழிவறையில் சாரையாக பாம்புகள் இருந்த சம்பவத்தின் அதிர்ச்சியும் பரபரப்பும் இன்னும் நீங்கவில்லை... ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிலும் இந்த கல்லூரியின் பாத்ரூமை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு கிளம்பியிருக்கிறது.. இந்த கழிவறை அமைந்துள்ள பகுதியில், ஏராளமான புதர்கள் மண்டிகிடக்கிறதாம்..
மாணவிகள் கழிப்பறை: பெண்கள் கழிப்பறை சுகாதாரமற்று, பராமரிப்பு இல்லாமலும் கிடப்பதால், மாணவிகள் கழிப்பறைக்கு மிகுந்த அச்சத்துடனே சென்று வருவதாகவும், இதனால் சில மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றன.
போதிய பராமரிப்பு இல்லாததால்தான், புதர் பகுதிகளிலிருந்து கழிவறை வரைக்கும் பாம்புகள் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. புதர்களை ஆரம்பத்திலேயே அப்புறப்படுத்தியிருந்தால் இப்படியொரு நிலைமை வந்திருக்காது என்றும், கழிவறைகளை உடனடியாக தூய்மைப்படுத்தி, பணியாளர்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் "இந்த கழிப்பறையில் பாம்புகள் உலா வருவதால், யாரும் இந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம்" என்று வெள்ளை கலர் பேப்பரில் எழுதி கழிப்பறை சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது..!!












Click it and Unblock the Notifications