ஆயிரக்கணக்கில் கோழிகள் கொன்று புதைப்பு! கடலூரில் பறவைக் காய்ச்சல்! ஆனாலும் குறையாத சிக்கன் விலை!
திருவாரூர்: கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி காரணமாக, நேற்று சுமார் 34,000க்கும் அதிகமான பிராய்லர் கோழிகள் கொன்று புதைக்கப்பட்டன. இருப்பினும் இன்று கடலூரை ஒட்டியுள்ள டெல்டா மாவட்டங்களில் சிக்கன் விலை குறையவில்லை.
இன்று காலை நிலவரப்படி திருவாரூரில் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் கறி, ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும்.. திருத்துறைப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இதே ரேட்டில் சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது.

கடலூரில் கோழிப்பண்ணைகளில், கடந்த அக்.28ம் தேதி முதல் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழக்க தொடங்கின. ஒவ்வொரு நாளும் உயிரிழப்பு அதிகரித்து.. ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கில் கோழிகள் உயிரிழந்தன. இதையடுத்து, உயிரிழிந்த கோழிகளின் உயிரியல் மாதிரிகளை சேகரித்த கால்நடை பராமரிப்பு துறையினர், அதை சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆய்வில், கோழிகள் உயிரிழக்க பறவை காய்ச்சல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பண்ணைகளிலிருந்து சுமார் 34,000 கோழிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கொன்று புதைத்துள்ளனர். அதேபோல, இன்று 12,860 கோழிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பண்ணைகளில் வேலை பார்த்தவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கடலூரில் மொத்தம் 125 இடங்களில் கறி கோழிகள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், இதில் 16 பண்ணைகளில் மட்டும்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும்.. 10 பண்ணைகளில் உள்ள கோழிகள் உயிரிழந்துள்ளன. 6 பண்ணைகளில் உள்ள கோழிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியிருக்கிறார்.
பறவைக் காய்ச்சல் இருந்தாலும் கூட, கடலூரை ஒட்டியிருக்கும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் சிக்கன் விலை குறையவில்லை. இன்று காலை நிலவரப்படி திருவாரூரின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல் பாதித்த கோழியை சாப்பிடலாமா?
பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸால் வெப்பநிலையை தாங்க முடியாது. இருந்தாலும் கூட, பறவைக்காய்ச்சல் பாதித்த கோழி என்று தெரிந்தால் அதை வாங்குவதையோ.. சமைப்பதையோ தவிர்க்க வேண்டும்.
காரணம் கோழியை சுத்தம் செய்யும் போது வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே கோழியை சுத்தம் செய்யும்போது, அந்த தண்ணீர் மற்ற உணவு பொருட்கள் மீது விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்து முடித்த பின்னர் கைகளை சுமார் 20 வினாடிகள் வரை சோப்பு போட்டு கழுவ வேண்டும். மிக முக்கியமான விஷயம் கறியை அதன் இளஞ்சிவப்பு நிறம் போகும் அளவுக்கு நன்றாக வேக வைக்க வேண்டும். எனவே மக்களே உஷாராக இருங்கள்.


Click it and Unblock the Notifications
