நாங்க வாயில் விரலை வைச்சுட்டு நிப்போமா.. காங்கிரஸ் பாயும் புலி.. திமுகவுக்கு விஸ்வநாதன் பதிலடி
திருவாரூர்: காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. ஆட்சியை இழந்து, கூட்டணி உடைந்ததால் தவெக மற்றும் கூட்டணி கட்சியினர் மீது திமுக கோபத்தில் உள்ளது. பரஸ்பரம் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் பாயும் புலியாக உள்ளது. இனி திமுகவின் அடிவருடியாக இருக்க மாட்டோம் என்று விஸ்வநாதன் பகிங்கரமாக அறிவித்துள்ளார்.
திருவாரூரில் உயர்கல்வித்துறை அமைச்சரும், காங்கிரஸ் நிர்வாகியுமான விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் முதலமைச்சர் விஜய் கவனமாக உள்ளார். இது சென்ஸிடிவான விஷயம். அதைப்பற்றி நான் பொதுவெளியில் பேச முடியாது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் பேச முடியாது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும். காங்கிரஸ் ஒரு அரசியல் இயக்கம்.

காங்கிரஸ் இனி பாயும் புலி
எங்கள் மீதான விமர்சனங்களை நாங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். பதுங்குவதற்கு நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் இயக்கம் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறி வருகிறது. கடந்த காலங்களை போல எல்லாம் இல்லை. திமுகவின் அடிவருடியாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் பேரியக்கம் நிமர்ந்து நிற்கிறது. நிமர்ந்த நன்னடையுடன் தமிழக பிரச்சனைகளுக்காக போராட்ட களத்தில் நிற்கவும் தயங்க மாட்டோம். திமுகவினர் எங்கள் மீது விமர்சனம் வைக்கட்டும்.
நாங்களும் அவர்களை விமர்சனம் செய்வோம். அதுதானே அரசியல். நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இல்லை. இப்போது வேறு கூட்டணிக்கு போய்விட்டோம். எங்களை விமர்சனம் செய்தால் நாங்கள் என்ன வாயில் விரலை வைத்து நிற்க வேண்டுமா. நாங்களும் திரும்பி விமர்சனம் செய்வோம். நல்லமுறை ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைக்க வேண்டுமென திராவிட கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறோம்.
நல்ல தமிழில்
விமர்சனத்தில் ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும். நல்ல முறையில் நல்ல தமிழில் எங்களை விமர்சனம் செய்யுங்கள். அசிங்கமான முறையில், கேவலமான முறையில் இழிவான முறையில் எங்களை விமர்சிக்க கூடாது. மீறி செய்தால் நேர்மையான முறையில் நல்ல வழியல் நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று கூறியுள்ளார். விஸ்வநாதன் கருத்துக்கு சமூகவலைதளங்களில் திமுகவினர் கோபத்துடன் பதில் அளித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
