"தவெக வெற்றி நிரந்தரம் இல்லை.. எதிர்க்கட்சி கூட.." வெளிப்படையாக பேசிய முத்தரசன்! பரபரப்பு பேச்சு
திருவாரூர்: தேர்தல் முடிவுகளை மட்டுமே வைத்து ஒரு கட்சியின் பலம் பலவீனத்தை சொல்லிவிட முடியாது என கூறியுள்ள கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன், தேர்தலில் வென்ற தவெக மற்றும் தேர்தலில் தோற்ற அனைத்து கட்சிகளுமே இந்த முடிவு இறுதியானது இல்லை என்பதை உணர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக 108 இடங்களில் வென்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் இல்லை என்பதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் தான் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்தன. அதில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளன. அதேநேரம் இடதுசாரிகள் வழக்கம் போல ஆட்சியில் பங்கெடுக்கவில்லை. வெளியில் இருந்தே தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே திருவாரூரில் பேசிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து ஒரு கட்சியின் பலம் பலவீனத்தை முடிவு செய்துவிட முடியாது என்று குறிப்பிட்ட முத்தரசன், தேர்தலில் வென்றவர்கள் தோற்றவர்கள் என இருவருக்கும் இது நிரந்தரம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "வெறுமன ஒரு சட்டசபை தேர்தலை மட்டும் வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை முடிவு செய்துவிட முடியாது. கடந்த கால தேர்தல் முடிவுகளையும் நாம் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்றை மட்டும் நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன். இது நிரந்தரம் இல்லை என்பதை தேர்தலில் தோற்றவர்களும் சரி, வென்றவர்களும் சரி உணர வேண்டும். இது இந்த தேர்தலின் முடிவு அவ்வளவு தான்!" என்றார்.
மேலும், நேற்று முன்தினம் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்தும் முத்தரசன் விமர்சித்திருந்தார். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், எப்படி ஒரு கிராம் தங்கத்தை ஒரு பைசாவுக்கு வழங்க முடியும் என அவர் அப்போது கேள்வி எழுப்பியிருந்தார். இருப்பினும், தங்கம் விலை சந்தை விலைக்கே வாங்கப்படும் என்றும் இந்த ஒரு பைசா என்பது செய்கூலி உள்ளிட்ட இதர செலவுகளுக்கு மட்டுமே ஆனது என விளக்கம் தரப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "நான் சில ஊடகங்களில் வந்த தகவலை வைத்து தவறாக கூறிவிட்டேன். அந்த கருத்துக்கு சாரி" என்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த தனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
