பூ வியாபாரி டிவி வாங்கி 6 மாசம்தான் ஆச்சு! அதற்குள் ரிப்பேர்! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருவாரூர்: புதிதாக டிவியை வாங்கி 6 மாதங்களிலேயே பழுதடைந்த நிலையில் அதை இலவசமாக பழுதுநீக்க மறுத்த டிவி நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (42). இவர் பூ வியாபாரி. இவர் கடந்த 18.12.2023 ஆம் ஆண்டு திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள ஒரு கடையில் ரூ 1.30 லட்சம் மதிப்பிலான எல்இடி டிவியை வாங்கினார். அப்போது டிவி நிறுவனம் பொதுவாக ஓராண்டு வழங்கும் வாரண்டியுடன் மேலும் 3 ஆண்டுகள் வாரண்டி வழங்க வேண்டும் என்றால் கூடுதலாக ரூ 19,099 செலுத்துமாறு தெரிவித்தனராம்.

இந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியில் எந்த பழுது ஏற்பட்டாலும் அதை இலவசமாக சரி செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனராம். இதனால் கார்த்தியும் ரூ 1,49,099 கொடுத்து டிவியை வாங்கிவிட்டார். இந்த டிவி 6 மாத காலம் நன்றாக இயங்கி வந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் ஆர்வலரான கார்த்தி ஒரு முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட டிவியை ஆன் செய்தார்.
டிவியில் ஒரு பாதி ஸ்கிரீன்
அப்போது டிவியின் ஒரு பாதியில் மட்டுமே ஒளிபரப்பானது. மீண்டும் ஒரு முறை டிவியை அணைத்துவிட்டு ஆன் செய்து பார்த்தார். அப்போதும் அப்படித்தான் வந்தது. இதையடுத்து அடுத்த நாள் டிவி நிறுவனத்தின் டெக்னீஷியனை வரவழைத்து பார்த்தார்.
டிஸ்பிளே
அப்போது அவர் ஆய்வு செய்துவிட்டு டிவியின் டிஸ்பிளே மீது ஏதோ பந்து போன்றதொரு பொருளால் அழுத்தம் கொடுக்கப்பட்டது போல் இருப்பதாக கூறிய அவர் நீங்கள் வைத்திருக்கும் வாரண்டியில் இயல்பாக ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை மட்டுமே கவர் செய்ய முடியும்.
பந்தால் அடிபட்ட டிஸ்பிளே
இது போன்று பந்தால் அடிப்பட்டதை நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுக்காது. நாங்கள் ரெடி செய்து தருகிறோம், ஆனால் அதற்குண்டான தொகையை செலுத்த சம்மதம் என்றால் சொல்லுங்கள் என சொல்லிவிட்டு சென்றாராம். மேலும் டிவி நிறுவனத்திற்கே டிவியை கொண்டு சென்ற போது டிவியை சரி செய்ய இயலாது, கொண்டு செல்லுங்கள் என சொல்லிவிட்டார்களாம். இதனால் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம்
இதையடுத்து கார்த்தி இந்த சம்பவம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் மோகன் தாஸ், உறுப்பினர் பாலு ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதில்,"டிவி நிறுவன வாரண்டி வழங்கிய ஓராண்டிலேயே டிவி ரிப்பேராகிவிட்டது. அந்த டிவி பந்து பட்டுதான் உடைந்தது என சொல்லும் டிவி நிறுவனம் அதை நிபுணரை வைத்து நிரூபிக்கவில்லை. எனவே டிவி நிறுவனம், பாதிக்கப்பட்ட கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக் கொண்டு அவருக்கு அதே மாடல், அதே விலையிலான டிவியை வழங்க வேண்டும்.
என்ன மாடல்
ஒரு வேளை அந்த மாடல் டிவி இல்லாவிட்டால் டிவிக்கு கார்த்தி கொடுத்த விலையான ரூ 1,49,099 ஐ 45 நாட்களுக்குள் கொடுத்துவிட வேண்டும். இந்த நிலையில் கார்த்தியை மனஉளைச்சலுக்குள்ளாகி, அலையவிட்டு பொருளாதார இழப்பை ஏற்படுத்திய டிவி நிறுவனம் அவருக்கு நஷ்ட ஈடாக ரூ 1 லட்சமும், வழக்குச் செலவு தொகையாக ரூ 10 ஆயிரத்தையும் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்". இவ்வாறு தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் கார்த்தி மகிழ்ச்சி அடைந்து ஆணையத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
பூக்கடைக்காரருக்கு வெற்றி
பூக்கடை வைத்திருக்கும் கார்த்தி இத்தனை பெரிய தொகையில் டிவி வாங்கி அதற்கு வாரண்டி இருந்து சரி செய்ய முடியாது என நிறுவனம் சொல்லியதால் எத்தனை முறை தனது வேலையை விட்டுவிட்டு அலைந்திருப்பார், இதனால் அவருடைய வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த கோணத்தில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications