திருவாரூரில் 2 காலி பாட்டில் ஸ்கேன் ஆகல.. எகிறி ஓடிய டாஸ்மாக் சூப்பர்வைஸர்.. ஷட்டரை இழுத்து.. ஐயோ
திருவாரூர்: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகின்றன. ஸ்கேன் ஆகாத பாட்டில்களை வாங்க மறுத்தால், அதற்கும் ஊழியர்கள்தான் நுகர்வோரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதற்கு உதாரணமாக திருவாரூரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலி பாட்டில்களை வாங்க மறுத்ததாக கூறி டாஸ்மாக் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டலும் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மதுபான விலையுடன் காலி பாட்டிலுக்கான ரூ.10 சேர்த்து புதிய MRP விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுபாட்டிலை விற்கும்போது MRP ஸ்டிக்கரையும், அந்த பாட்டில் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்டதா என்பதை உறுதி செய்யும் ஹாலோகிராம் ஸ்டிக்கரையும், காலி பாட்டிலை திரும்பப் பெறும்போதும் ஸ்கேன் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 3 முறை ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் காலி பாட்டில்கள்
ஆனால் பெரும்பாலான கடைகளில் 2 ஸ்கேன் கருவிகள் மட்டுமே உள்ளதால் கூடுதல் கருவிகள் இல்லாமல் விற்பனையையும் காலி பாட்டில் சேகரிப்பையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமல்ல, வெப்சைட் துண்டிப்பு, ஸ்கேன் செய்வதில் தாமதம், ஸ்டிக்கர் சேதமடைந்தால் பாட்டிலை திரும்பப் பெற முடியாத நிலை, கடைகளில் நீண்ட வரிசை, கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை உதவியை நாட வேண்டிய சூழல், யுபிஐ மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகளில் மதுபான விற்பனை தொகை மற்றும் காலி பாட்டிலுக்கான தொகையை தனித்தனியாக கணக்கிடுவதில் குழப்பம் என ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவி கொண்டிருக்கின்றன.
திருவாரூர் - ஸ்கேன் செய்ய முடியல
இந்தச் சூழலில்தான், திருவாரூரில் காலி மது பாட்டில்களை ஸ்கேன் செய்ய முடியாததால் ஏற்பட்ட பிரச்சினை, டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பழைய தஞ்சை சாலையில் 2 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது நேற்று மதியம் 9646 என்கிற அரசு மதுபான கடையில் காலி மது பாட்டிலை கொடுப்பதற்காக வந்த நபர் 4 பாட்டில்களை கொடுத்துள்ளனர்.. அதில் 2 பாட்டில் மட்டும் ஸ்கேன் ஆனால் அதை எடுத்துக் கொண்ட ஊழியர் மீதமுள்ள 2 பாட்டில்களை எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அலறிய சூப்பர்வைசர்
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், "எப்படி எனது காலி மது பாட்டிலை வாங்காமல் இருக்கலாம்" என சொல்லி, சகட்டுமேனிக்கு தகாத வார்த்தைகளில் ஊழியர்களை திட்டியுள்ளார்.
அதற்கு ஊழியர்கள், "ஸ்கேன் ஆனால் மட்டும் தான் பாட்டிலை திரும்ப பெற முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.. இதனால் வாக்குவாதம் வெடித்துள்ளது..
ஒருகட்டத்தில் அந்த நபரின் தொல்லை தாங்க முடியாமல், கடை ஊழியர்கள் திருவாரூர் நகர போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் உடனே விரைந்து வந்து, அந்த நபரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்..
வீடியோ வைரல்
ஆனால், மறுபடியும் 15 நிமிடங்கள் கழித்து வந்த அந்த நபர், தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்து விட்டார்.. அத்துடன் காலி மது பாட்டில்களை உடைத்து, கடையின் கேட்டை அடித்து தகராறு செய்தார்.. அங்கிருந்த சூப்பர்வைசர் ரமேஷை பார்த்து, "உன் தலையை துண்டாக்காமல் விடமாட்டேன்" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் கேட்டை சாத்திக்கொண்டு கடைக்குள் சென்று விட்டனர்..
மேலும் அங்கு நடப்பதையெல்லாம் ரமேஷ் வீடியோ எடுத்துள்ளார்.. கடைக்குள் வீடியோ எடுப்பதை அந்த நபர் பார்த்துவிட்டு, "போட்டோ எடுக்கறியா? அந்த போட்டோவை வைத்து என்ன செய்ய போகிறாய்? நான் உன் வீட்டுக்கே வந்து உன்னை கொன்றுவிடுவேன்.. நைட் 7 மணி ஆனாலும் உன் வீட்டுக்கு வருவேன்"என்று சத்தம் போட்டு சொன்னார்.
இதைக்கேட்டு மேலும் பயந்துபோனார் ரமேஷ்.. 2 கடைகளும் மூடப்பட்ட நிலையில் மறுபடியூம் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
யார் அந்த நபர்
அதற்குள் இந்த தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவவும், காட்டூர், தப்ளாம் புலியூர், அம்மையப்பன், கமலாபுரம் ஆகிய டாஸ்மாக் கடைகளையும் ஊழியர்கள் அவசர அவசரமாக மூடிவிட்டார்கள்.. இதனிடையே, டாஸ்மாக் கடையில் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.. அவரது பெயர் வேலு.. புலிவலம் பகுதியை சேர்ந்தவராம்.. பழைய தஞ்சை சாலையில் டிங்கரிங் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறாராம்.. அவரிடம் இப்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்..
டாஸ்மாக் கடையில், சூப்பர்வைசர் ரமேஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதில் ஏற்படும் டெக்னிக்கல் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் ஊழியர்களே எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது...!!




Click it and Unblock the Notifications
