'பெண் குழந்தை இல்லையே.. ஒரு வாய் சோறு கூட போட மாட்றாங்க'.. திருவாரூர் கலெக்டரிடம் முதியவர் கண்ணீர்
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட கலெக்டரை சந்தித்த முதியவர் ஒருவர், தன் பிள்ளைகள், தனக்கு ஒரு வாய் சோறு கூட போட மாட்றாங்க.. எச்சி க்ளாஸ் கழுவி சம்பாதிக்கிற காசினை கூட அடிச்சி புடிங்கிக்கிறாங்க என்று பேசியபடி கண்ணீர் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இன்றைய வாழ்க்கை முறையில், தங்களை போல் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் இளம் தலைமுறை பெற்றோர், அத்தனை சந்தோஷங்களையும் கேட்காமலேயே தருகிறார்கள். சிபிஎஸ்இ கல்வி, தினமும் உயர்தரமான உணவு, காலையில் ஸ்னாக்ஸ், மாலையில் ஸ்னாக்ஸ், வாரம் இருமுறை கறி விருந்து, வார விடுமுறையில் சினிமா, பீச், மாதம் ஒருமுறை மலைவாசல்தளங்களில் சுற்றுலா, சொந்த ஊர் பயணம், ஷாப்பிங் மால், விதவிதமான உடைகள், செருப்புகள், நகைகள், மிகப்பெரிய ஓட்டல்களில் நினைத்த போது எல்லாம் சாப்பாடு என அத்தனையும் தன் குழந்தைகளுக்கு தருகிறார்கள்..

ஆனால் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை, தன் பிள்ளைகளை போல் கவனிக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எல்லாருமே பெற்றோர்களை கவனிக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.. ஆனால் ஒரு சிலரே தங்கள் பிள்ளைகள் போல் பெற்றோரையும் பார்த்துக் கொள்கிறார்கள்.. பலர் ஓரளவு கவனிக்கிறார்கள்.. சிலர் சுத்தமாக கவனிப்பதே இல்லை..
இதில் யார்கவனிக்கப்படாத நிலைக்கு போகிறார்கள் என்று பார்த்தால், கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை வளர்த்து பெரிய நிலைமைக்கு கொண்டு வந்திருப்பார்கள்.. ஆனால் கடைசி காலத்தில் தங்களுக்கு என்று சேமிக்காதவர்களே அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.. கவனிக்கப்படாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இரண்டு பிள்ளைகள் உள்ளது என்றால், அண்ணன் உன்னை கவனிப்பான் என்று தம்பியும், தம்பி வீட்டில் போய் வாழு என்று அண்ணனும் சொல்லும் நிலை இருக்கிறது..
அதேநேரம் தனது பெற்றோர் நிலை பற்றி யோசிக்காதவர்கள் தனது மாமானார் மாமியாரை அதாவது மனைவி வீட்டில் இருந்து வருவோரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.. ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வேண்டியதை தருவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் இந்த நிலைக்கு காரணம். இன்றைய சூழலில் ஆண் பிள்ளையை பெற்ற பெற்றவர்கள் உண்மையில் பாவம் தான்.. அவர்களின் நிலைமை தான் மோசமாக இருக்கிறது..
சரி விஷயத்திற்கு வருவோம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, டீக்கடையில் வேலை செய்யும் முதியவர் லட்சுமணன் என்பவர் வந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள எழிலூர் அருகே நேமம் வடக்கு தெருவைச் சேர்ந்த முதியவர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தார். அப்போது கண்ணீர் விட்டு அழுதபடி பேசுகையில், "கஷ்டப்பட்டு 2 பசங்கள படிக்க வச்சோம் இப்போ ஒரு வாய் சோறு கூட போட மாட்றாங்க.. எச்சி க்ளாஸ் கழுவி சம்பாதிக்கிற காச கூட அடிச்சி புடிங்கிக்கிறாங்க..... சாமி, எனக்கு ஒரு பொம்பள புள்ளைய கொடுக்கவில்லை.. எனக்கு அரசின் உதவி வேண்டும்.." என்று கலெக்டர் முன் கதறி அழுதார்.
தனது ஒரு பிள்ளை கேட்டகிரிங் படித்து வேலை பார்க்கிறார் என்றும் இன்னொரு பிள்ளை கட்டிட வேலை பார்க்கிறார் என்றும், தன் மனைவி மாற்றுத்திறனாளி என்றும் ஒரு உதவி வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். மனதை கலங்கவைத்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications