திருப்பதி அலிப்பிரி நடைபாதையில் 12 அடி மலைப்பாம்பு.. ஓட்டம் பிடித்த பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிப்பிரி நடைபாதையில் ஏற்கனவே சிறுத்தை தாக்குதல் போன்ற சம்பவங்களால் பக்தர்கள் கடும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்குகள் அதிகமாக வர ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று அலிப்பிரி பாதையில் பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று திடீரென வந்ததால் பக்தர்கள் பயந்துபோனார்கள்.. என்னதான் நடந்தது மலைப்பாதையில்?
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்லும் இந்த அலிப்பிரி நடைபாதையில், நேற்று வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஏழுமலையானை தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தனர்.

திருப்பதி அலிப்பிரி நடைபாதை
அப்போது, நடைபாதையில் உள்ள மொக்கல்லா மலைக்கு அருகில் இருக்கும் படிக்கட்டுகளை நோக்கி, சுமார் 12 அடி நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட மலைப்பாம்பு திடீரென ஊர்ந்து வந்தது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய அந்த ராட்சத பாம்பு, பக்தர்கள் நடந்து செல்லும் வழித்தடத்தை நோக்கி வந்ததைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.. இதனால் அந்தப் பகுதி முழுவதும் மக்கள் ஓடத் தொடங்கி, கூட்டத்தில் பெரிய குழப்பமும் பயமும் ஏற்பட்டது..
தேவஸ்தான அதிகாரிகள்
பாம்பைப் பார்த்த பக்தர்கள் உடனடியாக இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவஸ்தானத்தின் ஒப்பந்தப் பாம்பு பிடிப்பாளரான பாஸ்கர் நாயுடு, அங்கிருந்த பக்தர்களை தள்ளிப் போகச் சொல்லிவிட்டு, அந்த 12 அடி நீள மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தார்.. நல்ல வேளையாக இந்தச் சம்பவத்தில் பக்தர்கள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.. இதனால் அங்கு நின்றவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்..
12 அடி மலைப்பாம்பு - வீடியோ
மலைப்பாம்பைப் பிடிக்கும் காட்சியை அங்கிருந்த பக்தர்கள் பலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.. பிடிபட்ட அந்த ராட்சத மலைப்பாம்பு, பின்னர் பாதுகாப்பாக சாக்கில் கட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடப்பட்டது.
அலிப்பிரி நடைபாதை எப்போதும் அடர்ந்த காடுகளின் வழியே செல்வதால், அங்கு சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் மட்டுமின்றி, ஆபத்தான பாம்புகளின் நடமாட்டமும் தொடர்ந்து இருந்து வருகிறது..
இதன் காரணமாக, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.. நடைபாதையோரம் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பக்தர்கள் யாரும் இறங்கக் கூடாது என்றும், எப்போதும் பாதுகாப்பு ஊழியர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குழுக்களாக மட்டுமே நடக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளனர்.. மேலும், மாலை நேரத்திற்கு மேல் தனியாக யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்..
அலிப்பிரி நடைபாதை விலங்குகள்
பொதுவாக, அலிப்பிரி நடைபாதை தற்சமயம் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன், ஆபத்தான ஹை அலர்ட் பகுதிகளில் 10 மீட்டருக்கு ஒரு பாதுகாப்பு ஊழியர் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் அனைவரும் குழுக்களாக வனத்துறை ஊழியர்களின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதுமட்டுமல்ல, வனவிலங்குகள் பெரும்பாலும் சிறுவர்களையே குறிவைப்பதால், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மதியம் 2 மணிக்கு மேல் மலைப்பாதையில் ஏறுவதற்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெற்றோருடன் எச்சரிக்கையாகச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், தற்போது 12 அடி நீள மலைப்பாம்பு பக்தர்கள் நடக்கும் படிக்கட்டுகளுக்கே வந்திருப்பது திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடையே இன்னும் கூடுதலான பயத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்..!!












Click it and Unblock the Notifications