70 வயதில் 2600 முறை திருப்பதி அலிபிரி மலைபாதையில் பயணித்த ரமணமூர்த்தி! 14 வயதில் தொடங்கிய பயணம்
திருப்பதி: 70 வயது முதியவர் ஒருவர் இதுவரை திருப்பதி ஏழுமலையானை நடைபாதை வழியாக 2600 முறை ஏறி தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளார். இவர் நடக்கும் அலிபிரி நடைபாதையானது சுமார் 12 கி.மீ. தூரமாகும். 12 கி.மீ. தூரம் இந்த முதியவர் நடந்தே பயணித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடைபாதை வழியாக ரமணமூர்த்தி என்ற 70 வயது முதியவர், 2600 முறை ஏறிச் சென்று தரிசனம் செய்துள்ளாராம். இதுவரை 3,350 தடவை வெங்கடாஜலபதியை தரிசனம் செய்துள்ளாராம்.

இதை அவர் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். தனது 14 வயது முதலேயே ஏழுமலையான் கோயிலுக்கு நடைபாதை வழியாக செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாராம். ஒரே நாளில் இரு முறை கூட அவர் மலைக்குச் சென்று தரிசனம் செய்துள்ளாராம்.
அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு இடங்கள் வழியாக பக்தர்கள் நடந்தே திருமலைக்கு செல்கிறார்கள். அலிபிரி வழியாகத்தான் பேருந்து, கார்கள், வாகனங்கள் எல்லாம் செல்லும். அங்குதான் நடைபாதையும் இருக்கிறது. இதுதான் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான நுழைவாயில் என்பார்கள்.
அலிபிரியில் 3550 படிகள் உள்ளன. இது மொத்தம் 12 கி.மீ. தூரமாகும். இங்கு 4 கோபுரங்கள் உள்ளன. இந்த நடைபாதையில் மழை, வெயிலில் இருந்து பக்தர்களை காக்க கூரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே கடைகளும் உள்ளன. இந்த பாதயாத்திரை வழியாக வருவோருக்கு காளி கோபுரத்தில் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனுடன் திருமலைக்கு சென்றால் அங்கு நடந்து செல்வோருக்கு என தனி வரிசை உள்ளது.
அது போல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை உள்ளது. அது அலிபிரியை விட செங்குத்தானது. இது 2.1 கி.மீ. தூரம் கொண்டது. 2400 படிகளை கொண்டது. ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வரை இலவச பேருந்துகளை திருப்பதி தேவஸ்தானம் இயக்கி வருகிறது. இந்த வழியாக பெருமாளே திருப்பதிக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கும் 80 சதவீத தூரத்தை கடந்ததும் டோக்கன் வழங்கப்படும். அதை கொண்டு குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்துவிடலாம். இந்த வழித்தடத்தில் காட்டு விலங்குகள் உலா வருவதால் தற்போது இந்த நடைபாதை மூடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications