இனி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2-3 மணி நேரத்தில் தர்ம தரிசனம்! பக்தர்களுக்கு "லட்டு"!
திருப்பதி: திருமலை திருப்பதியில் சர்வ தரிசனத்தில் வந்து தரிசிப்பவர்களின் தரிசன நேரத்தை குறைக்கும் பொருட்டு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி கோயில் என்னதான் உலகிலேயே பணக்கார சாமியாக இருந்தாலும் இந்த கோயிலில் ஏழைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் தர்ம தரிசனத்திலேயே விரைந்து சுவாமி தரிசனம் செய்துவிடலாம்.

திருப்பதிக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் சாதாரண நாட்களில் கூட தர்ம தரிசனத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் பக்தர்கள் அவதியடைகிறார்கள். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது.
இந்த வாரியத்தின் 54 ஆவது தலைவராக பிஆர் நாயுடு பொறுப்பேற்றார். அவரது தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை வேறு துறைகளுக்கு மாற்ற ஆந்திர அரசுக்கு தேவஸ்தான அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
இல்லாவிட்டால் அந்த பணியாளர்களை விருப்ப ஓய்வில் செல்லவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசக்க பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் அந்த தரிசன நேரத்தை 2 முதல் 3 மணி நேரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. தினந்தோறும் அன்ன பிரசாத மையங்களில் புதிய உணவை அறிமுகப்படுத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் திருமலையில் உள்ள குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் 3 அல்லது 4 மாதங்களுக்குள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அலிபிரியில் சுற்றுலா கழகம் சார்பில் 20 ஏக்கர் நிலம் கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் மும்தாஜ் ஓட்டல் நிறுவனத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அறங்காவல் குழு ரத்து செய்துவிட்டது. ஆன்மீகத் தலமான திருமலையில் அரசியல் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யப்படும். அது போல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் பெயர் நீக்கப்படும்.
அதாவது கடந்த ஆட்சியில் பல்வேற திட்டங்களுக்கு நிதிகள் திசை திருப்பப்பட்டதால் அவப்பெயர் ஏற்பட்டது. அதே வேளையில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டின் பணம் திருப்பதி தேவஸ்தானத்திற்கே வரும்படி இனி வழி வகை செய்யப்படும் உள்ளிட்ட தீர்மானங்களை தேவஸ்தானம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications