திருப்பதிக்கு வரும் ஜெகன்மோகன்.. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டா அனுமதி.. போர்க்கொடியை தூக்கும் பாஜக
அமராவதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை திருப்பதி திருமலைக்கு வரவுள்ளார். அவர் கிறிஸ்தவர் என்பதால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து போட்ட பின்னர கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.

குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதையடுத்து, இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு சார்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெகன் மோகன் கூறுகையில், சந்திரபாபு நாயுடுவின் பொய்யான குற்றச்சாட்டால் திருப்பதி ஏழுமலையானின் புனிதம் கெட்டுவிட்டது. எனவே, செப்டம்பர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனித்தைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது என்று கூறி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பூஜையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை அவர் திருமலைக்கு அலிபிரி வழியாக பாத யாத்திரையாகச் சென்று சுவாமி வழிபாடு செய்யவுள்ளார். இந்நிலையில், அவரை திருமலையில் அனுமதிக்கக் கூடாது என்று இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், ஜெகன்மோகன் கிறிஸ்தவர் என்பதால் ஏழுமலையான் சுவாமி மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னரே திருமலைக்குள் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த கோரிக்கை தொடர்பாக திருப்பதி எஸ்பி திருமலராவ் மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவிடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். மேலும், தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications