திருமலை திருப்பதியில் திகைத்த பக்தர்கள்.. பெருமாள் கோயிலில் காலையிலே குழப்பம்.. தேவஸ்தானம் சொல்வதென்ன
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி உத்தரவால் பக்தர்கள் திடீர் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.. ஆனாலும் , இதுகுறித்த விளக்கத்தை தேவஸ்தானமே தற்போது வழங்கியிருக்கிறது. இதனால் பெருமாள் பக்தர்களின் குழப்பம் மெல்ல மெல்ல நீங்கி வருகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் என்று சொன்னதுமே, தேவஸ்தானத்தின் பிரசாதமான, லட்டுதான் நம்முடைய கண் முன்னே வந்து நிற்கிறது.. தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக இதற்கனவே அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கி செல்வது வழக்கம்.

திருப்பதி லட்டு: திருப்பதி லட்டின் ஸ்பெஷாலிட்டியே அதன் மிகப்பெரிய சைஸ்தான்.. ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும் இந்த லட்டுகள், உயர் தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. அதனால்தான், இந்த லட்டு தயாரிப்பதில் மட்டும், தேவஸ்தானம் தொடர்ந்து கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. அதேபோல தேவஸ்தானத்தில் அதிக அளவு பரபரப்பை தந்துவிடுவதும் இதே லட்டுகள்தான்.
கடந்த மாதம் தமிழகத்திலிருந்து செல்லும் நெய்யில் கலப்படம் இருப்பதாக கூறி, கடும் அதிர்ச்சியை வெளியிட்டிருந்தது தேவஸ்தானம். இப்போது லட்டுக்கு ஆதார் கார்டு அவசியம் என்றுகூறி, ஒட்டுமொத்த பக்தர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது தேவஸ்தானம்.
திடீர் அதிரடி: அதிகபட்சமாக ஒரு ஆதார் கார்டுக்கு 2 லட்டுகளை வாங்கி செல்லலாம் என்றும், சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆதார் அட்டைக்கு 1 இலவச லட்டு மற்றும் கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடு விதித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அறை முன்பதிவு, சாமி தரிசனம் போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை உள்ளது.. தற்போது லட்டுக்கும் ஆதார் அவசியமா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த திடீர் உத்தரவால், திருப்பதிக்கு சென்ற பக்தர்கள் சிலர் குழப்பத்துக்கும் ஆளானார்கள்.
பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காகவே இப்படியொரு முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத நிலைமை உள்ளது..
அதிக லட்டு: எனவே, கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ஒரு லட்டுக்கு ரூ.50 என்று கூறி கட்டணம் செலுத்தி கூடுதலாக இதுநாள் வரை பெற்று வந்தார்கள்.. இதன்காரணமாக, அதிக லட்டு தேவைப்படுபவர்கள், அந்த பகுதியிலுள்ள புரோக்கர்களை பிடித்து, அவர்களின் மூலம் கூடுதல் பணம் தந்து, அதிகமான லட்டுகளை வாங்கி சென்றுவிடுகிறார்களாம்.
இதுகுறித்த புகார்கள் தேவஸ்தானத்துக்கு செல்லவும்தான், பக்தர்களுக்கு இந்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கிறது.. எனவே, லட்டு வாங்க வரும் பக்தர்கள், சரியான தரிசன டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள், 48 முதல் 62 வரை உள்ள கவுன்டர்களை அணுகி, ஆதாரை பதிவு செய்து, சரிபார்த்து, லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.
இடைத்தரகர்கள்: இந்த அதிரடிகளால், திருப்பதியில் இடைத்தரகர்களின் மோசடிகளுக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல், லட்டுகளை கள்ளச்சந்தையில் விற்கும் நபர்களை ஆதார் பதிவின் மூலம் பொறிவைத்து பிடித்துவிட முடியும் என்றும் தேவஸ்தானம் நம்புகிறது. இதனால், பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படைத்தன்மையுடன் வழங்க முடியும் என்றும் தேவஸ்தானம் வலுவாக நினைக்கிறது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி கூறும்போது, "சாமி கும்பிடாமல் வெறும் லட்டுக்காகவே வரும் பக்தர்களுக்குதான் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பை அமல்படுத்துவதற்காக தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. நாங்கள் வேறு எதையும் கட்டுப்படுத்தவில்லையே?
வெளிப்படைத்தன்மை: தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத்தவிர, முன்பு போலவே கூடுதல் லட்டுகளையும் வாங்கலாம். இதனால் லட்டு வினியோக அமைப்பில் வெளிப்படைத்தன்மைத்தான் அதிகரிக்கும்" என்று விளக்கம் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications