திருப்பதி பிரம்மோற்சவம்: 25 லட்சம் லட்டுகள்.. 5.68 லட்சம் பேர் தரிசனம்..ரூ.20 கோடி காணிக்கை
திருப்பதி: திருமலையில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பேர் தரிசனம் செய்தனர். 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 நாட்களாக கோலகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

மலையப்பசுவாமி வாகன சேவை
கடந்த 9 நாட்களாக 18 விதமான வானங்களில் மலையப்பசாமி உலா வெகுவிமர்சியாக நடைபெற்றது.
முதல்நாள் இரவு முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷவாகன சேவை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேலைகளில் கோயில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவிந்தா முழக்கம்
கருட வாகன சேவை நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர். காணும் இடமெங்கும் மனித தலையாக காணப்பட்டது. பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது. தங்க தேரோட்டம், பழமையான தேர்த் திருவிழா என பிரம்மோற்சவம் களை கட்டியது. ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 8 மாநிலங்களை சேர்ந்த 1,906 நடன கலைஞர்கள், 91 குழுக்களாக மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை கோவில் திருக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு வராக சாமி கோவில் முக மண்டபத்தை அடைந்தனர்.

பக்தர்கள் புனித நீராடல்
அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம்,சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்துக்குள் எடுத்து சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள் மூன்று முறை நீரில் மூழ்க செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர். அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.

25 லட்சம் லட்டுகள் விற்பனை
ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்வது வழக்கம். திருப்பதி திருமலையில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பேர் தரிசனம் செய்தனர். 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் ரூ.20 கோடியே 43 லட்சத்து 9,400 காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இரண்டு லட்சம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கையாக அளித்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications