பரந்தூர் விமான நிலையம்.. தவெக அரசு தந்த ட்விஸ்ட்.. திமுக எம்பியின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்
சென்னை: பரந்தூர் விமான நிலையம் வராது என பலரும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. திமுக மாநிலங்களவை எம்பி பி.வில்சன் ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் TIDCO மூலம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுத்து 10,500 கோடி செலவில் முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்கான ஒப்புதல் கடந்த 2025 ஏப்ரல் மாதம் மத்திய அரசு வழங்கி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் வராது என்றே தவெகவினர் தேர்தலுக்கு முன்பு வரை கூறி வந்தனர். தேர்தல் முடிந்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் அந்த பகுதியில் நிலம் வாங்கிப்போட்டவர்கள் பலர் கவலை அடைந்தனர். அதேநேரம் விவசாயிகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். வழக்கமான வாழ்க்கைக்கு பரந்தூர் மக்கள் போய்விட்டார்கள்.

இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில், திமுகவைச் சேர்ந்த எம்பி வில்சன் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு எழுப்பிய கேள்வியில், சென்னை, பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பசுமையான விமான நிலையத்தின் தற்போதைய முன்னேற்றம், கட்டம் வாரியான முன்னேற்றம், இதுவரை மதிப்பிடப்பட்ட மொத்த திட்டச் செலவு, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு மற்றும் நிறைவு செய்வதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன..
முன்மொழியப்பட்ட பசுமைக்கள விமான நிலையத்தின் இடத்தை மாற்றுமாறு புதிய தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதா, அப்படியாயின், அத்தகைய கோரிக்கையின் விவரங்கள், தேதி வாரியாக மற்றும் அதற்கான அரசின் பதில் என்ன;
சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களின் தற்போதைய விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் நிலை, திட்டம் வாரியான நிதி ஒதுக்கீடு, பணி மற்றும் நிதி சார்ந்த முன்னேற்றம், எதிர்பார்க்கப்படும் முடிவுறும் தேதி மற்றும் பிற தொடர்புடைய விவரங்களை சுட்டிக்காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் கூறுகையில், "பரந்தூரில் பன்னாட்டு பசுமைக்கள் விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு 07.04.2025 அன்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 'கொள்கை அளவிலான' ஒப்புதலை வழங்கியுள்ளது. செப்டம்பர் 2024-இல் டிட்கோ சமர்ப்பித்த கொள்கை அளவிலான விண்ணப்பத்தின்படி, முதல் கட்டத்திற்கான (Phase-1) தோராயமான திட்டச் செலவு ரூ. 10,500 கோடி ஆகும்.
2008-ஆம் ஆண்டின் பசுமைக்கள விமான நிலையக் கொள்கையின்படி, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு , நிதி திரட்டுதல், சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட பசுமைக்கள விமான நிலையத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிலைய உருவாக்குநர் அல்லது மாநில அரசிடமே உள்ளது. நிலம் கையகப்படுத்துதல், கட்டாய அனுமதிகள் கிடைப்பது, நிதி நிர்வாக முடிவு போன்ற பல காரணிகளைப் பொறுத்தே விமான நிலையத் திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு அமையும்.
பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் என்றால்.. அதற்கு பதில் இல்லை.
தற்போதைய விமான நிலையங்களை தரம் உயர்த்துவது/நவீனப்படுத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகும். சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களின் முக்கிய விரிவாக்க மற்றும் மேம்பாட்டுப் பணிகள் பின்வருமாறு:
சென்னை: தோராயமாக 81% பிசிகல் மற்றும் 71% நிதி முன்னேற்றத்துடன் ரூ. 2,467 கோடி செலவில் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணி நடைபெறுகிறது. மழைநீர் வடிகால் மாற்றம் (ரூ. 209.01 கோடி), டெர்மினல் 1 புதுப்பித்தல் (ரூ. 81.8 கோடி) மற்றும் ஏர்ஸைடு உள்கட்டமைப்பு மேம்பாடு (ரூ. 480.06 கோடி) போன்ற கூடுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சிராப்பள்ளி: தோராயமாக 76% பௌதிக மற்றும் 49% நிதி முன்னேற்றத்துடன் ரூ. 80.17 கோடி செலவில் புதிய ATC கோபுரம் மற்றும் தொழில்நுட்பக் கூடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயம்புத்தூர்: புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ரூ. 51.31 கோடி செலவில் எல்லைச் சுவர் கட்டுதல் மற்றும் ரூ. 13.71 கோடி செலவில் தற்போதுள்ள டெர்மினல் கட்டிடத்தில் கூடுதல் மற்றும் மாற்றங்கள் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன." இவ்வாறு அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
