"திருப்பதி உண்டியல் காணிக்கையில் ரூ 100 கோடியை நான்தான் திருடினேன்" கிளார்க் ரவிக்குமார் ஒப்புதல்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியின் போது ரூ 100 கோடியை திருடியதை ரவிக்குமார் என்பவர் ஒப்புக் கொண்டார். இதை நேற்று வீடியோ மூலம் கண்ணீர் மல்க தெரிவித்து ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ 100 கோடியை திருடியது உண்மைதான். நீதிமன்றம் எத்தகைய ஆய்வுக்கு உத்தரவிட்டாலும் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன்.
என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள். நானும் என் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம். எனது தவறை உணர்ந்து நான் கேபிள் தொழிலும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து சம்பாதித்த மொத்த சொத்தில் 90 சதவீத சொத்துகளை தேவஸ்தானத்திற்கு எனது குடும்பத்தினர் சம்மதத்துடன் எழுதி வைத்து விட்டேன். நான் முழு மனதுடன் சுவாமிக்கு எழுதி கொடுத்தேன்.
பெரிய பாவம்
நான் மிகப் பெரிய பாவம் செய்ததை நினைத்தும் எனது மனைவி, பிள்ளைகள் படும் துயரத்தை நினைத்தும் நான் கவலைப்படாத நாளே இல்லை. வேறு சிலருக்கு நான் பணம் கொடுத்ததாகவும் வேறு வகைகளில் எதையோ கொடுத்ததாகவும் கூறும் தகவல்களில் உண்மையில்லை. அது போல் காணிக்கை பணத்தை திருட அந்தரங்க பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என பரவும் தகவலிலும் உண்மை இல்லை என ரவிக்குமார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி நடந்தது. ரவிக்குமார் திருமலை பெத்த ஜீயர் மடத்தில் கிளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் கேபிள் தொழிலிலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். ரவிக்குமார் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியின் போது இந்திய மதிப்பில் 72 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை திருட முயன்ற போது அவர் கையும் களவுமாக சிக்கினார்.
14 கோடி ரூபாய்
அதே ஆண்டில் மே- ஜூன் மாதத்தில் ரவிக்குமாரும் அவரது குடும்பத்தினர் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக எழுதி வைத்தனர். 2023 செப்டம்பர் 9 அன்று, திருப்பதியின் லோக் அதாலத் நீதிமன்றம், ரவிக்குமார் மற்றும் அப்போதைய TTD உதவி பாதுகாப்பு அலுவலர் (AVSO) ஒய். சதீஷ் குமார் இடையேயான ஒரு சமரசத்தின் அடிப்படையில், ரவிக்குமாரை விடுதலை செய்து வழக்கை முடித்து வைத்தது.
ரிட் மனு
ஆனால், திருப்பதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மாச்செர்லா ஸ்ரீனிவாஸ் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அக்டோபர் மாதம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க CID மற்றும் ACB (ஆந்திரா கிரைம் பிரான்ச்)அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. தங்களது விசாரணை முடிவுகளை டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் மூடிய கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
காவல் ஆய்வாளர் மர்ம மரணம்
இந்த வழக்கின் புகார்தாரரும், ரயில்வே காவல் ஆய்வாளருமான டி. சதீஷ் குமார், 2023 நவம்பர் 10 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். CID விசாரணைக்கு ஆஜராவதற்காக ரயிலில் திருப்பதிக்குச் சென்ற அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
சிஐடி விசாரணை
இதற்கிடையில், CID மற்றும் ACB ஆகிய இரு அமைப்புகளும் தங்கள் விசாரணை முடிவுகளை டிசம்பர் 2 அன்று உயர் நீதிமன்றத்தில் மூடிய கவர்களில் சமர்ப்பித்தன. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரவிக்குமார் வீடியோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications