காசு கொண்டு போனா கப்பு கப்புனு புடுக்கிறாங்க! தாராபுரத்தில் ஸ்ட்ரிக்ட் காட்டும் அதிகாரிகள்! உஷார்!
திருப்பூர்: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காரின் டாஷ்போர்டில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட 1.75 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பொதுமக்கள் பணத்தை அவசர தேவைகளுக்காக எடுத்து சென்றால் உரிய ஆவணத்துடன் கொண்டு செல்ல வேண்டும் என என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரம், குண்டடம், மூலனூர், தளவாய்பட்டினம், அலங்கியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைப் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தாராபுரம்-குண்டடம் பிரிவு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தாராபுரம் இடைத்தேர்தல்
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நவீன்குமார் தலைமையில், ஊதியூர் போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வலுப்பூர்சாமி மற்றும் தலைமைக் காவலர்கள் முத்து, சரவணன், ரிஷி ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த சொகுசு காரை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர். காரின் டாஷ்போர்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் இருப்பது சோதனையில் தெரியவந்தது.
தேர்தல் பறக்கும் படை
இதையடுத்து, பணத்திற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். காரில் வந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மின் இணைப்பு மற்றும் கட்டிடப் பணிகளுடன் தொடர்புடைய கார்த்திக் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, கட்டிடப் பணிகளுக்குத் தேவையான மின் இணைப்பு பொருட்களை கோவையில் கொள்முதல் செய்துவிட்டு, அதற்கான செலவுகள் போக மீதமிருந்த தொகையை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் நோக்கிச் செல்வதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பணம் பறிமுதல்
இருப்பினும், காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், தேர்தல் விதிமுறைகளின்படி அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் கார்த்திக்கையும் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.75 லட்சம் பணத்தை வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள்
இதைத்தொடர்ந்து, தாராபுரம் போலீசார் பணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் தாராபுரம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிக அளவில் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் எச்சரிக்கை
குறிப்பாக, தேர்தல் காலத்தில் அவசரத் தேவைக்காக பணம் எடுத்துச் செல்லும் நபர்கள், அந்தப் பணம் எங்கிருந்து பெறப்பட்டது, எதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் அதிக அளவு ரொக்கப் பணம் கொண்டு செல்லப்பட்டால், தேர்தல் விதிமுறைகளின்படி பணம் பறிமுதல் செய்யப்படும் என தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நடைபெறும் காலம் முழுவதும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
