திருப்பூர் கோயிலில் கூடை கூடையாக மட்டன் சோறு.. அவிநாசி திருவிழாவில் 2000 ஆடுகள்! சிலிர்த்த பக்தர்கள்
திருப்பூர்: ஆடி மாத உற்சவங்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.. அந்தவகையில் கடந்த 2 நாட்களாக நடந்த கோவில் விழாக்கள் இணையத்தில் வீடியோக்களாக வெளிவந்து பக்தர்களை பரவசப்படுத்தி வருகின்றன.. அந்தவகையில், திண்டுக்கல், திருப்பூர், சிவகங்கை மாவட்டங்களிலுள்ள புகழ்பெற்ற கோவில்களில் நடந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து வழிபாடு செய்தது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே வரப்பட்டியில் குரும்ப கவுண்டர் ஆரியகுல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட வீரபத்திரர் கோவில் உள்ளது.

இந்த கோயிலில் பெருமாள், வீரபத்திரர், பட்டவன், பாப்பாத்தி, மதுரை வீரன் சன்னதிகள் உள்ளதால், இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா வருடா வருடம் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்..
பக்தர்கள் தங்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது இந்த திருவிழாவின்போது நடைபெறும் முக்கிய வழிபாடாகும்... இப்படி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் கங்கணம் கட்டி, விரதம் மேற்கொள்வார்கள்.
தலையில் உடைக்கப்பட்ட தேங்காய்
அந்த வகையில் இப்போதும் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.. கங்கைக்கு சென்று கரகம் அலங்காரம் செய்யப்பட்டு சக்தி அளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தி, அலங்கரிக்கப்பட்ட கரகம் வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.
பிறகு பொங்கல் வைத்து வீரபுத்திரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை முடிந்ததுமே, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.. விரதம் இருந்த பக்தர்கள் கோவிலின் முன்பு ஈர துணியுடன் உட்கார்ந்திரக்க, பூசாரி அருள் வந்து ஆடிக்கொண்டே பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இறுதியில் மதுரைவீரன் சாமிக்கு கிடா வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை, கோவை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை பூக்குழி நேர்த்திக்கடன்
அதேபோல சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஸ்ரீரெங்கபுரம் அருணகிரிபட்டினத்தில் இந்து அறநிலைத்துறை சார்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், 119-வது ஆண்டு ஆடி உற்சவ விழா ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.
108 பால்குடங்களை சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சிலர் பறவைக் காவடி எடுத்தும், வேல் குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வந்தனர். இந்த ஊர்வலம் கோவிலை அடைந்ததும், அனைவரும் கோவில் முன்பாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்..
ஆட்டுக்கிடாய்கள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோவிலிலும் பொங்கல் திருவிழா சிறப்பாக நடந்தது.. வாண வேடிக்கையும் குதிரை வாகன பூஜையும், அதிகாலை 3 மணிக்கு பேச்சியம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், விடிகாலை 5 மணிக்கு திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள், 2 ஆயிரம் ஆட்டுக்கிடாய்களை வெட்டி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். இந்த ஆடி மாதம் முழுவதுமே கோயிலில் விழாக்கள் நடைபெறும் என்பதால், தமிழகத்தை நோக்கி அண்டை மாநிலங்களிலுள்ள பக்தர்களும் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications