ரியாலிட்டி.. இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் ஜெயிக்குமா? எதிர்க்கட்சிகள் தந்த ஷாக் ரிசல்ட் தெரியுமா?
திருப்பூர்: இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்குத்தான் சாதகமா.. தமிழகத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன? ஆட்சி அதிகாரம் கையில் இருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய பலமா.. எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பே இல்லையா? இன்று வெளியாகும் 2 தொகுதி ரிசல்ட், இந்த நம்பிக்கையை மாற்றுமா.. என்ன நடக்கப்போகிறது? கடந்த கால இடைத்தேர்தல் வரலாறு என்ன சொல்கிறது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பார்கள்.. இதற்கு காரணம், ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதுதான்.. அரசு நிர்வாகம், அமைச்சர்கள், உள்ளூர் கட்சி நிர்வாகம் என ஆளும் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் இயந்திரமும் ஒரு தொகுதியை மையமாக வைத்து வேலை செய்ய முடியும்.

இடைத்தேர்தல் யாருக்கு பலம்
அத்துடன் தொகுதிக்கு தேவையான திட்டங்கள், நிதி, நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் முன்வைத்து வாக்கு கேட்க முடியும்... "நம்ம தொகுதிக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ இருந்தால் அரசிடம் இருந்து வேலைகள் எளிதாக நடக்கும்" என்ற எண்ணமும் சில வாக்காளர்களிடம் இருக்கும்..
அதேசமயம், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவது, வலுவான உள்ளூர் வேட்பாளர் இல்லாதது போன்ற விஷயங்களும் ஆளும் கட்சிக்கு கூடுதல் பலமாக மாறும்... அதனால்தான் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெல்லும் என்ற ஒரு பொதுவான நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் வென்ற கதை
ஆனால், இது எழுதப்படாத விதி கிடையாது.. தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு நிறைய இருக்கிறது. இதற்கு முதலில் 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையே சொல்லலாம்.. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் போட்டியிட்ட நிலையில், 2 கட்சிகளின் வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளி சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
அதேபோல், 2019-ம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக, 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது.. ஒரே நேரத்தில் நடந்த இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக பெற்ற வெற்றி, ஆளும் கட்சிக்கு எதிராகவும் இடைத்தேர்தல் முடிவு செல்ல முடியும் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமைந்தது.
நத்தம் விஸ்வநாதன்
இதற்கு முன்பும் தமிழகத்தில் இதுபோன்ற முடிவுகள் வந்திருக்கின்றன.. 1999-ம் ஆண்டு நத்தம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, திமுக ஆளும் கட்சியாக இருந்தது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதே ஆண்டில் நடந்த திருவட்டாறு தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹேமச்சந்திரன், திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
2004-ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் திருமாவளவன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கணேசன், அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பாக, 1991-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி ராஜினாமா செய்த துறைமுகம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வராசன் வெற்றி பெற்றார்.
ஆளும் கட்சிக்கு சாதகம்
ஆக, தமிழக இடைத்தேர்தல் வரலாற்றை பார்த்தால், ஆளும் கட்சிக்குத்தான் சாதகம் என்ற பொதுவான கருத்து இருந்தாலும், அதை மாற்றிய முடிவுகளும் நிறையவே இருக்கின்றன.. இந்த பின்னணியில்தான் இன்று வெளியாகவுள்ள 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் மீது இப்போது எல்லா தரப்பினரின் கவனமும் திரும்பியுள்ளது.
குறிப்பாக, இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பெரிய அளவில் புகார்கள் இல்லாதது, தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.. கடந்த காலங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற புகார்கள் இடைத்தேர்தல்களில் எழுந்த நிலையில், இந்த முறை அப்படியான புகார்கள் பெரிய அளவில் இல்லாததால், உண்மையான வாக்காளர் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அரசியல் கட்சிகளும் ஆர்வமாக உள்ளன.
அதனால், இந்த 2 தொகுதிகளிலும் ஆளும் கட்சியின் அதிகார பலம்தான் மீண்டும் கை கொடுக்குமா.. அல்லது கடந்த காலங்களைப் போல எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களா என்பதற்கான பதில் இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெரிந்துவிடும்....!


Click it and Unblock the Notifications
