’அந்த’ வீட்டு ஓட்டு நமக்கு விழாது.. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா சொன்ன சீக்ரெட்!
திருப்பூர்: ஒவ்வொரு வீடாக முதலமைச்சரின் விஜயின் புகைப்படத்தை ஒட்டுங்கள்.. எந்த வீட்டில் ஒட்ட வேண்டாம் என சொல்கிறார்களோ? அந்த வீட்டில் தவெகவிற்கு ஓட்டு விழாது என தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா கூறியுள்ளார். மேலும், தாராபுரம் தொகுதியில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் இணைந்து தவெகவை வீழ்த்த முயற்சிக்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
தவெக தேர்தல் பணிமனையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சத்தியபாமா," நான் அதிமுகவிலிருந்து நல்ல தலைவர் இல்லாததாலேயே தவெகவிற்கு வந்தேன். என்னை கட்சி மாறியவர் என்று மட்டுமே கூற முடியும்.

தற்பொழுது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பானுமதி தேர்தல் தேதிக்கு முன்பு வரை தவெகவில் தான் இருந்தார். அதிமுகவில் எம்எல்ஏ சீட்டுக் கொடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரிலேயே அவர் அதிமுகவிற்கு சென்றார்.
ஒருவருக்கு 50 ஓட்டுகள் என பிரித்து வேலை செய்ய வேண்டும். அனைவரும் தவெகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அப்படி வாக்களிக்காதவர்கள் மாற்றுக் கட்சியினரை நாம் மாற்றும் வேலையில் ஈடுபட வேண்டும். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அதிமுகவில் நல்ல தலைவர்கள் இல்லை என கூற மாட்டேன். எம்ஜிஆர் நல்ல தலைவர் தான்.
40 ஆண்டு கால ஆட்சியில் திமுக அதிமுக இடையே சட்டமன்றத்தில் எத்தனை கேள்விகள் எழுந்ததில்லை.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி நாற்காலியின் அடியில் முள்படுக்கைப்போல் ஒவ்வொரு கேள்விகளாக தொடர்ந்து அடுக்கி வருகிறார். திமுக ஆட்சியில் இருக்கும் போது எதிர் கட்சியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இத்தனை கேள்விகளை கேட்கவில்லை. அப்போதே எனக்கு சந்தேகம் இருந்தது. திமுக என்ன அத்தனை சுத்தமான ஆட்சி நடத்தியதா?
தாராபுரம் தொகுதியில் அதிமுக திமுக வேட்பாளர்கள் இணைந்து தவெகாவை வீழ்த்த முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. அதிமுக திமுக இணைப்பு பேச்சு வார்த்தை தொடர்ந்ததை அடுத்து நான் கட்சியிலிருந்து விலகினேன். தற்பொழுது ஊழலற்ற ஆட்சியில் உள்ளேன். ஒரு நல்ல தலைவரின் கீழ் பணியாற்ற வந்துள்ளேன். சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் திமுக அதிமுக இருவரும் இணைந்து செயல்படுகின்றன. இது வரலாறு காணாத ஒன்று" என தெரிவித்தார்.
2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஆட்சி அமைந்தது. தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தன. இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதிமுகவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்பட்ட நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் தனித் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றிருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டு. அவரை எதிர்த்து திமுக சார்பில் இந்திராணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கௌரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். சுமார் 1.99 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி சுமார் 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். தவெக வேட்பாளர் கௌரி சித்ரா சுமார் 46 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றார்.


Click it and Unblock the Notifications
