கசாப்பு கடையில் "கோயில் பசுக்கள்".. அவசரமாக கிளம்பி வந்த இந்து முன்னணி.. சுயஉதவிக்குழுவா? என்னாச்சு
திருப்பூர்: ஆலயங்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை விற்பனை செய்யும் சுயஉதவிக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில், "தானமாக வழங்கிய பசுக்களை, கோவில்கள் தான் பராமரிக்க வேண்டும். தனி நபர்களுக்கு வழங்கிய பசுக்கள், அவர்களிடம் தான் உள்ளனவா என்பதை யார் கண்காணிப்பார்கள்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

சுயஉதவி குழுக்கள்: இதற்கு சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் பதிலளிக்கும்போது, "தானமாக வழங்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவை சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படுகின்றன" என்றார். உடனே, "எந்த சுயஉதவி குழுவிடமும் பசுக்கள் இல்லை" என, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் பதிலளித்தார்.
இதையடுத்து, ஒவ்வொரு கோவிலிலும் தானமாக பசுக்கள் பெற, எண்ணிக்கை வரம்பு நிர்ணயிக்கலாம் என்று தெரிவித்திருந்த முதல் பெஞ்ச், தானமாக வழங்கிய பசுக்களில், சுய உதவி குழுக்களுக்கு எத்தனை கொடுக்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலைய துறைக்கு உத்தரவிட்டது.. அத்துடன் இந்த விசாரணையை, வரும் 29க்கும் தள்ளி வைத்துள்ளது.
விற்பனை : இதுஒருபுறமிருக்க, திருப்பூர் ஆலயங்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை விற்பனை செய்யும் சுயஉதவிக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது.. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:
"கோவில்களுக்கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை, கோவில் நிர்வாகத்தினர், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வளர்க்க வழங்குகின்றனர். குழுக்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பெரும்பாலும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் பசுக்கள், இடைத்தரகர்களால் கசாப்பு கடைக்கு விற்கப்படுகின்றன.
வெள்ளை அறிக்கை: இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு வழங்கும் பசுக்களை பராமரிக்க முடியாத அளவுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை திறனற்று இருக்கிறது. இது, மன்னிக்க முடியாத குற்றம்... பசுக்கள் எண்ணிக்கை மற்றும் பெற்றுக் கொள்ளும் சுய உதவிக் குழுக்கள் எண்ணிக்கை, குழுவினர் வைத்துள்ள பசுக்கள் எண்ணிக்கை என விபரங்களை, வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்.
"கோவிலில் இருந்து தானமாக பெற்ற பசுவை விற்க மாட்டேன்" என்ற உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, பசுக்களை விற்பனை செய்யும் சுய உதவிக்குழு நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications