முதல்வருக்கு தொழில் அதிபர் டாலர் மணி கொடுத்த விருந்து! மதுரைனா மட்டும் தான் அயிரை மீன் குழம்பாம்..!
திருப்பூர்: அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருப்பூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டில் மதிய விருந்து அளித்திருக்கிறார்.
அசைவ உணவுகளுக்கு முதலமைச்சர் நோ சொல்லிவிட்டதால், முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே தயார் செய்யப்பட்டிருந்தன.
இந்த விருந்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியினர் யாரையும் காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலம் நேற்று காலை சென்னையிலிருந்து கோவை சென்றடைந்தார். அங்கு பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த கையோடு திருப்பூருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொழிலதிபர் டாலர் மணி, தனது வீட்டில் மதிய விருந்தளித்தார்.

அசைவம் தவிர்ப்பு
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், என எளிய முறையில் உணவு இருந்தால் போதுமானது என ஏற்கனவே முதல்வர் தரப்பில் தொழிலதிபர் டாலர் மணியிடம் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் அதற்கேற்ப உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. முதலமைச்சரை பொறுத்தவரை மதுரைக்கு சென்றால் மட்டும் அயிரை மீன் குழம்பு விரும்பி சாப்பிடுவது வழக்கம். மற்றபடி பெரும்பாலும் மற்ற ஊர் சுற்றுப்பயணத்தின் போது அசைவ உணவுகளை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கியப் பிரமுகர்கள்
திருப்பூர் தொழிலதிபதி டாலர் மணி அளித்த இந்த விருந்தில் மாவட்ட அமைச்சர்களான வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மற்றும் மாவட்டச் செயலாளர்களான செல்வராஜ், பத்மநாபன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் யாரையும் காணமுடியவில்லை. இந்த விருந்தின் போது மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் அதனால் தொழில்துறை சந்திக்கும் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் தொழிலதிபர் டாலர் மணி விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

அரசு நிகழ்ச்சிகள்
அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தில் முக்கிய பங்காற்றி வரும் தமிழக தொழிலதிபர்களில் திருப்பூர் சக்திவேலும், டாலர்மணியும் முக்கியமானவர்கள். இதில் சக்திவேல் அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்படும் சூழலில் டாலர் மணி திமுக தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். இதனிடையே கட்சிப் பதவி தொடர்பான விவகாரத்தில் பலரும் சிபாரிசுகள் கோரி வரும் நிலையில், டாலர் மணி அதில் தலையிட விரும்பாமல் ஒதுங்கிக்கொள்வது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications