பழக்க தேஷத்தில் விசிலுக்கு பதில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட விஜயபாஸ்கர்.. வெடித்து சிரித்த சத்யபாமா
திருப்பூர்: அதிமுக தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி ஐக்கியமான ஒருவர் தான் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா. இவருக்காக கட்சி மாறி வந்த மற்றொரு மூத்த தலைவரான எம்ஆர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். அப்போது பழக்க தோஷத்தில் விசில் சின்னத்திற்கு என்பதற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு விஜயபாஸ்கர் கேட்கவே அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் தேர்தல் முடிந்த கையோடு தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் ஐக்கியமாகினர். இதன் காரணமாகவே அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சத்யபாமா
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமாவே மீண்டும் களமிறங்கியுள்ளார். இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும், களத்தில் சத்யமாபா செல்லும் பல இடங்களில் அவர் கட்சி மாறியது தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இரட்டை இலைக்கு வாக்களிக்கவும்
இதற்கிடையே முன்னாள் அமைச்சரும் தவெகவில் ஐக்கியமான மற்றொரு அதிமுக மாஜி தலைவருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தாராபுரத்தில் சத்யபாமாவுக்காக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தவெகவின் 'விசில்' சின்னத்துக்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக, பழக்க தோஷத்தில் அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்துக்கு வாக்கு கேட்டு விட்டார். இதை கேட்டவுடன் அங்கிருந்த தவெக வேட்பாளர் சத்யபாமா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் வெடித்து சிரித்தனர்.
அதன் பிறகே தனது தவறை உணர்ந்த விஜயபாஸ்கர் சமாளித்தவாறே விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அங்கிருந்த பொதுமக்களும் கூட ஒரு நொடி கன்பியூஸ் ஆகிவிட்டனர்.
இரட்டை இலை டு விசில்
கடந்த தேர்தலில் சத்யபாமா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதே தொகுதியில் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த சூழலில்தான் விஜயபாஸ்கர் பழைய பழக்கத்தில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதும், உடனடியாக சுதாரித்துக் கொண்டு விசில் சின்னத்துக்கு வாக்கு கேட்டதும் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கடந்த தேர்தலில் தாராபுரத்தில் அதிமுகவுக்காக வாக்கு சேகரித்த அதே சத்யபாமா, தற்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராக சுழன்று சுழன்று வந்து மக்களை சந்தித்து வருகிறார்.
கட்சி தாவல்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளும், தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகளும் பெற்றனர். சத்யபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும், தேர்தல் முடிந்த கையோடு அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மட்டுமின்றி மாரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயகுமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம். ஆர். விஜயபாஸ்கர் (கரூர்). சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) என மொத்தம் ஆறு சிட்டிங் எம்எல்ஏக்கள் தவெகவில் ஐக்கியமாகி இருந்தனர்.


Click it and Unblock the Notifications
