நான் என்ன தவறு செய்தேன்? காலாங்காத்தால 5 மணிக்கு அதுவும் நைட் டிரஸ்ஸில் கைது! நாதக கார்த்திகா ஆவேசம்
திருப்பூர்: "எந்த தவறும் செய்யாத என்னை இரவு உடையில் கைது செய்தனர்" என நாம் தமிழர் தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகா ஆவேசமாக தெரிவித்துள்ளார். முதல்வரை அவதூறாக பேசியதாக கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்த்திகா கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது அவர் செய்தியாளர்களை பார்த்து இந்த விஷயங்களை தெரிவித்தார். ஆனால் அவரை பேச விடாமல் போலீஸார் தலையை உள்ளே அழுத்தி வேனில் ஏற்றிச் சென்றனர்.

தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசியது, சாலை மறியலில் ஈடுபட்டது, போலீசாருடன் வாக்குவாதம் என பல்வேறு வழக்குகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திகாவை மருத்துவ பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கே செய்தியாளர்களை பார்த்ததும் கார்த்திகா, "நான் எந்த தவறும் செய்யவில்லை. இறுதி பிரச்சார தினத்தன்று முதலமைச்சருக்கு மட்டும்தான் வாக்கு சேகரிக்க உரிமை உள்ளதா, எங்களுக்கு வாக்கு சேகரிக்க உரிமை இல்லையா, இரவு உடையில் அதிகாலை 5 மணிக்கே என்னை கைது செய்துள்ளனர்.
நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா? கோமாளி விஜய் ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பினார். உடன் அங்கிருந்த நாதக நிர்வாகிகளும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே கார்த்திகாவை அழைத்துச் சென்ற போலீசார் உடனடியாக மருத்துவமனை கதவுகளை அடைத்தனர். மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த பின்னர் மீண்டும் கார்த்திகாவை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
11 பேரும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தவெக நிர்வாகி ஒருவர் ரூ 400 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதை பொருளை வைத்திருந்தார். அவர் குறித்து முதல்வர் விஜய் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார், இந்த நிலையில் கார்த்திகாவை கைது செய்தது அராஜகம் என முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் சீமான், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இவர்கள் அனைவரும் கார்த்திகாவை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
