பல்லடம் எம்எல்ஏ தலையீட்டால் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிப்பா.. திருப்பூரில் பெண் ஆவேச புகார்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண் தொழில்முனைவோர் நடத்தி வரும் ஹாலோ பிளாக் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், பல்லடம் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன்பாளையத்தில் செல்வி என்பவர் ஹாலோ பிளாக் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழிற்சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அரசியல் தலையீட்டின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலைக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தும் மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பெண் தொழில்முனைவோர் நீதிமன்றத்தை நாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 4-ஆம் தேதி தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மறுநாளே அதாவது 5-ஆம் தேதி மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் கடந்த ஐந்து மாதங்களாக தொழிற்சாலை முடங்கியுள்ளதாகவும், அங்கு பணியாற்றி வந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தொழில்முனைவோர் செல்வி, தொழிற்சாலை உரிமையாளர் செல்லச்சாமி மற்றும் தொழிலாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, அலுவலக வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்த மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும், எம்எல்ஏ ஆதரவாளர்கள் தங்களை வீடியோ எடுப்பதாகவும், கேலி செய்து மிரட்டுவதாகவும், 'நீ தொழில் நடத்தினால் நாங்கள் தொழிற்சாலையை மூடுவோம்' எனக் கூறி வருவதாகவும் செல்வி குற்றம்சாட்டினார். தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் விபரீத முடிவை எடுக்க நேரிடும் என்றும், அதற்கு சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்லடம் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரியவரும். ஏனெனில் அந்த பகுதி மக்கள் தொழிற்சாலை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பிரச்சனையா அல்லது அந்த பகுதியில் வேறு என்ன பிரச்சனை என்பதை எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தால், மறுதரப்பின் விவரம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
