திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் செக்கிங் இன்ஸ்பெக்டர் கேள்வி.. தனியார் பஸ் டிரைவர் கட்டிப்புரண்டு சண்டை
திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் நிலையம் திங்கள்கிழமை என்பதால், வழக்கமான பரபரபரப்புடன் சுறுசுறுப்பாக காணப்பட்டது. பலர் வேலைக்கு செல்வதற்காகவும், ஊர்களுக்கு செல்வதற்காகவும் குவிந்து இருந்தனர், அதேபோல் காலை பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் வந்து சென்று வந்த வண்ணம் இருந்தனர். அங்கு ஈரோடு செல்ல வேண்டிய பேருந்து, நடைமேடையை விட்டு புறப்படாமல் இருந்த நிலையில், அதனை, அரசு போக்குவரத்து கழக அதிகாரி தட்டிக்கேட்டார். இந்த விவகாரத்தில் தனியார் பஸ் டிரைவர், அரசு அதிகாரியுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு செல்ல தனியார் பஸ் தயாராக இருந்தது. அந்த பஸ்சில், டிரைவராக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 38 வயதாகும் குமார் , கண்டக்டராக திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்த 28 வயதாகும் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.

தினமும் காலை 7 மணிக்கு, அந்த தனியார் பேருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்த பிறகும், அந்த பஸ் ஈரோட்டுக்கு செல்லாமல் நடைமேடையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து பஸ்நிலையத்தில் பணியில் இருந்த அரசு போக்குவரத்து கழக சோதனை ஆய்வாளர் முத்தையன் (58) அங்கு சென்றார். தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் பஸ்சை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். ஆனால் டிரைவர் பஸ்சை எடுக்காமல் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் சோதனை ஆய்வாளர், தனியார் பஸ் டிரைவர், கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரம் அடைந்த டிரைவர், கண்டக்டர் 2 பேரும் சேர்ந்து முத்தையனை தாக்கினார்களாம். பதிலுக்கு முத்தையனும் அவர்களை திருப்பி தாக்கியாக கூறப்படுகிறது,
ஒரு கட்டத்தில், தனியார் பஸ் டிரைவர் குமாரும், அரசு போக்குவரத்து கழக சோதனை ஆய்வாளர் முத்தையனும் தரையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதனைக்கண்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதனையடுத்து சில பயணிகள் மற்றும் சக டிரைவர், கண்டக்டர்கள் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர். இந்த மோதலில் முத்தையனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் குமார் மற்றும் கண்டக்டர் குணசேகரனை கைது செய்தனர். இதற்கிடையே திருப்பூர் பஸ்நிலையத்தில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சியை சில பயணிகள் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications
