சஸ்பெண்ட் அதிகாரிக்கு ஓடோடி வந்த டிரான்ஸ்பர் உத்தரவு.. திருப்பூர் மாநகராட்சியில் கடைசி நேர ட்விஸ்ட்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிக்கு, டிரான்ஸ்பர் உத்தரவு வந்துவிட்டதாம். அதாவது பார்க்கிங் ஏல முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி கமிஷனர் ராஜசேகரின் விபரம் மறைக்கப்பட்டு வேலூருக்கு இடமாற்றம் செய்ய உத்தரவு வந்தது பெரும பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இதையடுத்து சஸ்பெண்ட் விபரத்தை உடனடியாக அனுப்பி அந்த டிரான்ஸ்பர் உத்தரவை திருப்பூர் மாநகராட்சி நிறுத்தி வைத்துவிட்டது. என்ன நடந்தது?
திருப்பூர் மாநகராட்சியில் சமீபத்தில்தான் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.. அதாவது பணி வழங்கப்படாத தொழிலாளி விக்டர் ஆரோக்கியசாமி என்பவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மாநகராட்சி நிர்வாகம் வழங்கத் தவறிவிட்டது.. இதனால் கோவை தொழிலாளர் நீதிமன்றம் ஜப்தி நோட்டீஸ் பிறப்பித்தது.

திருப்பூர் அரசு அதிகாரி
நீதிமன்ற அமீனா மற்றும் சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஜப்தி நடவடிக்கையை அமல்படுத்தத் முற்பட்டதை அடுத்து, உடனடியாக விழித்துக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் விக்டர் ஆரோக்கியசாமிக்கு வழங்க வேண்டிய ரூ.1,01,135 தொகைக்கான வங்கி வரைவோலையை எடுத்து நீதிமன்ற அமீனாவிடம் ஒப்படைத்தனர்.
இதன்மூலம் நீதிமன்றத்தின் கண்டிப்பான ஜப்தி உத்தரவு, பாதிக்கப்பட்ட தொழிலாளியின் இழப்பீட்டுத் தொகையை விரைவாக விடுவிக்க வழிவகுத்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருப்பூர் மாநகராட்சியில் இப்போது மீண்டும் ஒரு சலசலப்பு வெடித்துள்ளது.. திருப்பூர் மாநகராட்சியில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் ராஜசேகர். இவர் முன்னதாக வருவாய் பிரிவு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான காமராஜ் சாலையில் அமைந்துள்ள பன்னடுக்கு வாகன பார்க்கிங் வளாகத்தை ஏலம் எடுத்தவர் அரவிந்த் சக்திவேல்.
அவரை மிரட்டி வெளியேற்றியது, அரவிந்த் சக்திவேலே கொடுத்தது போல போலி விலகல் கடிதத்தைத் தயாரித்தது, வைப்புத் தொகையை மாநகராட்சி கணக்கிலிருந்தே திரும்ப அனுப்பியது போன்ற அடுக்கடுக்கான பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ராஜசேகர் மீது புகார்கள் வலுத்தன. இந்த விவகாரத்தில் ராஜசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடைசி நேர ட்விஸ்ட்
ஆனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும், இது தொடர்பான அறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
நிலைமை இப்படியிருக்க, நகராட்சி நிர்வாகத்துறை திடீரென ராஜசேகரை வேலூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து உஷாரான திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக நகராட்சி நிர்வாக ஆணையருக்கு ராஜசேகரின் சஸ்பெண்ட் விபரங்களை தெரிவித்து, அந்த இடமாறுதல் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
கமிஷனருக்கு தெரியாதா
ஒருபுறம் முறைகேடு புகார், மறுபுறம் சஸ்பெண்ட் விபரம் தெரிவிக்கப்படாமல் டிரான்ஸ்பர் உத்தரவு எனத் திருப்பூர் மாநகராட்சி வட்டாரத்தில் அரங்கேறியுள்ள இந்த தொடர் குளறுபடிகள் தற்போது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு 1 மாதமாகியும் ஆணையருக்குத் தெரியாதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.. சஸ்பெண்ட் அதிகாரிக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்ட இந்த சம்பவம் மீடியாவிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
