திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம்! 15 தொகுதிகள் இலக்கு? கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்!
திருப்பூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசி அவரது ஆதங்கத்தை சரி செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு வசம் தான் இருப்பதாகவும் மன்னர் காலத்திலும் மன்னர் நிர்வாகத்தின் கீழ் தான் கோவில்கள் இருந்தன எனவும் கூறிய கே.எஸ். அழகிரி, கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் எதன் அடிப்படையில் கூறினார் என வினவியுள்ளார். மேலும், கோவில்களை பொறுத்தவரை அரசுக்கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது என்றார்.
சேகர்பாபுவை பார்த்தால் சைவ பழம் போல் தெரிவதாகவும் இதுவரை 5,000 கோடிக்கு மேல் கோவில் சொத்துக்களை திரும்ப பெற்றுள்ளார் எனவும் கூறிய கே.எஸ்.அழகிரி, இதற்காக அவரை நிர்மலா சீதாராமன் பாராட்ட வேண்டுமே தவிர குறை சொல்லக்கூடாது என்றார். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாலைக்கண் நோய் இருப்பதாக விமர்சித்துள்ள அழகிரி, அதனால் தான் தமிழகத்தில் தீண்டாமை உள்ளதாக அவர் பேசுகிறார் என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை அரசின் சில நடவடிக்கைகள் தவறாக இருக்கும்பட்சத்தில், அதனை திரும்பப் பெறுகிறார் என்றும் அதன் அடிப்படையில் தான் திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் கூட வாபஸ் பெறப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். காவிரியை வைத்து கர்நாடகா பாஜகவும் தமிழக பாஜகவும் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் நேரில் பேசி அவரை சரி செய்வோம் என்றார்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டும் சோதனைகள் நடந்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமே தவிர வேறு இல்லை என்றும் வருகிற மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications