நடப்பது தவெக ஆட்சியே இல்லை.. வாய் திறங்க சி.எம் சார்.. கம்யூனிஸ்ட் எம்பி விமர்சனம்
திருப்பூர்: தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக அரசின் சமீபத்திய செயல்பாடுகளால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. நடப்பது தவெக ஆட்சியே இல்லை என்று திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், திருப்பூர் எம்பியுமான கே.சுப்பராயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கிறது என்பது முழு உண்மையல்ல. தோற்றத்தில் தவெக ஆட்சி நடைபெறுதாக எண்ணலாம். ஆனால், உள்ளடக்கத்தில் அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் நடக்கிறது. அந்த அதிகாரவர்க்கத்தை இயக்குவது சங்கிகளின் கருத்தோட்டங்களே. அதனால்தான் கம்யூனிச சிந்தனை கொண்ட மாணவர்களை இந்த அரசு குறிவைத்துக் கணக்கெடுக்கிறது.

பொதுவாக ஆட்சியாளர்களில் இருவகை உண்டு. ஒன்று, ஆட்சியாளர்களை அதிகாரிகள் இயக்குவது. இரண்டாவது, அதிகாரிகளை ஆட்சியாளர்கள் இயக்குவது. இதில் முதல் வகையைச் சேர்ந்ததே தவெக அமைச்சரவை. கம்யூனிஸ்டு மாணவர்களைக் குறிபார்த்துப் பட்டியலிட்டது குறித்து முதலமைச்சர் விஜய் வாயே திறக்கவில்லையே ஏன். இனியும் மௌனம் காக்காமல் முதலமைச்சர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்.
அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை, அச்சப்பட்டுக் கலங்குவது மார்க்சிய தத்துவஞானத்தை தாங்கி நிற்கிற கம்யூனிஸ்டுகளைக் கண்டு தான். கார்ப்பரேட்டுகளும், அந்நிய நேரடி முதலீடுகளும், ஏகாதிபத்தியங்களும் அஞ்சி நடுங்கிச் சாகட்டும். தொழிலாளி - விவசாய வர்க்க ஒற்றுமைச் சின்னமான செங்கொடி அதன் போர்க்கொடியே" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
