திருப்பூர் பனியன் கம்பெனி.. பயங்கரவாத தொடர்புடன் பணியாற்றிய 6 பேர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
திருப்பூர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டில் கைதான 8 பேரில் 6 பேர் தமிழ்நாட்டின் திருப்பூர் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர்கள் என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைத்துள்ளது. மற்ற இருவரும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து டெல்லி கியூ பிரிவு காவலர்கள் திருப்பூர் வந்து நேரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் திருப்பூரில் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் முறைகேடாக பதுங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.

இதன்பின் மிசானூர் ரகுமான், முகமது ஷபாத், உமர் உட்பட 6 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்ஃபோன்கள், 16 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் ரயில் மூலமாக டெல்லி அழைத்து சென்றனர்.
இவர்கள் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலி ஆவணங்கள் கொடுத்துதான் திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் இப்படி 8 பேரை மொத்தமாக டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
அவர்களில் 6 பேர் திருப்பூரிலும், 2 பேர் மேற்கு வங்கத்தில் கைதாகி இருக்கின்றனர். திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 பேரும் வடமாநில முகவரிகளைக் கொண்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி இருக்கின்றனர். இவர்கள் 6 பேர் மீதும் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட எந்த காவல் நிலையத்திலும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும் அவர்கள் திருப்பூரில் எவ்வளவு காலம் தங்கி இருந்தனர், எங்கெங்கு பணி செய்தனர் என்பது தொடர்பாகவும் திருப்பூர் காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமன திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் புலம்பெயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications