வக்கு இருக்கா? பெண் போக்குவரத்து போலீசாரிடம் அவதூறாக பேசிய தவெக நிர்வாகி.. திருப்பூரில் அதிர்ச்சி!
திருப்பூர்: திருப்பூரில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல், செல்போனில் பேசியபடி வந்த நபருக்கு ஆதரவாக தவெக நிர்வாகி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி இருக்கிறது. பெண் போலீசாரை தரக்குறைவாக ஆபாசமாக பேசிய தவெக நிர்வாகியால், அந்த இடமே பரபரப்பாகியது.
திருப்பூர் தெற்கு போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் பல்லடம் சாலை சந்தைப்பேட்டை அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் முத்து செல்வம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் செல்போனில் பேசிக்கொண்டு வந்த நபரை நிறுத்திய போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டி மீது அபராதம் விதிக்க முற்பட்டனர்.

அப்பொழுது அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர், நான் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகி என்று கூறிக்கொண்டு அவரது நண்பருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் வாகனத் தணிக்கை செய்த இடத்துக்கு தவெக தென்னம்பாளையம் பகுதி இளைஞர் அணி இணை அமைப்பாளர் விக்னேஷ் வந்துள்ளார்.
அங்கு வந்தவர் போக்குவரத்து போலீசாரிடம், எதற்காக வாகனத்தை நிறுத்தி உள்ளீர்கள்? என்று கேட்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போக்குவரத்து பெண் காவலரிடம், வாகனத்தை எடுத்துச் செல்ல போலீசாருக்கு வக்கு இருக்கிறதா? அதனை பத்திரமாக வைக்க வக்கு இருக்கிறதா? என்றும் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணியாமல் வந்தது , செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கியது, முன்பக்க நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, பக்க கண்ணாடிகள் இல்லாதது, போலீசாரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டு பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி நேரடியாக போலீசாரிடம் தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தவெகவினர் அதிகளவில் சேட்டை செய்வதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், நேரடியாக போலீசாரிடமும் வம்பு செய்ய தொடங்கி இருப்பது விவாதமாக மாறியுள்ளது.



Click it and Unblock the Notifications
