உடுமலைப்பேட்டை மரகதம் வீட்டு வாசலில் நின்ற முதலை.. உடனே 2 நாய்கள் மிரட்டல் சம்பவம்.. எப்படி தெரியுமா
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வாசல் வரை முதலை ஒன்று ஊர்ந்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்குள் நுழைய முயன்ற முதலையை பார்த்த 2 வளர்ப்பு நாய்கள் ஆக்ரோஷமாக குரைத்து குரைத்தே விரட்டிய சம்பவம் இப்போது கவனம் ஈர்த்துள்ளது. இந்த சிசிடிவி வீடியோ, சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது..
உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாப்பான்குளம் பகுதியில் உள்ள நொச்சிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த ஓடை பகுதியில் வசித்து வந்த முதலை ஒன்று நீரோட்டத்தில் அடித்து வந்து, குடியிருப்பு பகுதிக்குள் திடீரென வந்துவிட்டது... பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த மரகதம் என்பவரது வீட்டை நோக்கி அந்த முதலை மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது.
நைட் நேரம் என்பதால் வீட்டில் இருந்தவர்கள் முதலில் இதை கவனிக்கவில்லை... முதலை வீட்டின் வாசல் பகுதிக்கு வந்தபோதுதான், அந்த வீட்டில் வளரும் 2 நாய்களும் அதன் நடமாட்டத்தை கவனித்து விட்டன.. உடனே அந்த நாய்கள் சத்தமாக குரைக்க தொடங்கின.
முதலை அருகே வருவதை பார்த்ததும், அதை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்து குரைத்து விரட்ட முயன்றன. நாய்கள் தொடர்ச்சியாக குரைத்தபடி முதலையை விரட்டியதால், அந்த முதலை அங்கிருந்து மெதுவாக பின்வாங்கி சென்று விட்டது..
பொதுவாக மழைக்காலங்களில் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அங்குள்ள வன உயிரினங்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன... அப்படித்தான் நேற்றைய தினமும் முதலை புகுந்துள்ளது.. இப்போது அந்த முதலை எங்கே சென்றது என்று தெரியவில்லை.. குடியிருப்பு பகுதிக்குள் வந்த முதலையை கண்டறிந்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வாசலில் முதலை ஒன்று ஊர்ந்து வருவதும், அதை பார்த்ததுமே 2 வளர்ப்பு நாய்கள் தொடர்ந்து குரைத்து துரத்துவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ இணையத்திலும் பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications
