“வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் என்ன சொன்னார்கள் தெரியுமா?” அதிரவிட்ட அமைச்சர் செங்கோட்டையன்
திருப்பூர்: "வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் நமது தலைவர் விஜய்யை எதிர்பார்க்கிறார்கள், இந்தியாவையே ஆளுகிற சக்தி கொண்டவர் விஜய்தான்" என்று தவெக அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
திருப்பூரில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் தவெக உயர்மட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான செங்கோட்டையன் பேசுகையில், "நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்துள்ளேன். இவ்விரு தலைவர்களுக்குப் பிறகு, அவர்களின் வழியில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவையே ஆளுகிற சக்திதான் விஜய்.

ஒரு வாரத்துக்கு முன்னர், வட மாநிலத்திலிருந்து சிலர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழக முதல்வர் விஜய்யை போல, எங்களுக்கும் முதலமைச்சர் கிடைப்பார்களா என்று கேட்டார்கள். அவர்களும் நமது முதல்வரை எதிர்பார்க்கிறார்கள். விஜய்யை தவிர வேறு எவராலும் முடியாது என வட மாநிலங்களிலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவையே ஆளுகிற சக்தி கொண்டவர் விஜய். 1967, 1977-க்கு பிறகு 2026-ல் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்கிறார். இதனால்தான் அவரை தமிழக மக்கள் நேசிக்கின்றனர்.
திரையுலகின் உச்சத்தைத் தொட்டவர் விஜய். திரையுலகில் அவரை வெல்வதற்கு எவராலும் முடியவில்லை. தனது போட்டியாளர்களை கடந்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இன்று அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் வரையில் அவர்தான் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைக்க இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
அண்மைக்காலமாகவே, விஜய்யை பிரதமர் ஆக்குவோம் என தவெகவின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்தச் சூழலில், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், விஜய் இந்தியாவையே ஆளும் சக்தி படைத்தவர் எனப் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
