விஜய் ரோட்ஷோவில் முன்னாள் அமைச்சர்களுக்கு நிகழ்ந்த சோகம்.. கோபத்தின் உச்சிக்கு சென்ற நேரு
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோட் ஷோ சென்றார். அப்போது காவல்துறையினர் திமுக முன்னாள் அமைச்சர்கள் நேரு உள்ளிட்டோர் சென்ற காரை தடுத்துள்ளனர். கடுப்பான நேரு காரில் இருந்து இறங்கி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துள்ளது. பிரதான கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்தனர். முதலமைச்சர் விஜய் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். தொகுதி முழுக்க அவர் ரோட்ஷோ வந்தார். இதனால் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியது.

நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கார்
ஏற்கனவே அதிமுக நிர்வாகிகளை கைது செய்து தேர்தல் பணியை தடுப்பதாக தவெக மீது புகார் எழுந்தது. அதிமுக மாவட்ட செயலாளரிடம் காவல்துறை விசாரணை நடத்திய விவகாரம் அரசியலில் புயலை கிளப்பியது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இறுதி நாள் பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளும் பாதிக்கப்பட்டனர். நாம் தமிழர், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் காவல்துறை தடுத்ததாக புகார் கூறினர்.
தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ சென்ற நேரத்தில், திமுக முன்னாள் அமைச்சர்கள் நேரு, சாமிநாதன், எம்பி ஆ. ராசா ஆகியோர் அந்த வழியாக காரில் சென்றனர். அவர்களின் வண்டியை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளனர். முதலமைச்சர் ரோட் ஷோ செல்வதால், பாதுகாப்பு கருதி விட முடியாது என்று மறுத்துள்ளனர். அப்போது நேருவின் ஆதரவாளர்கள், "மினிஸ்டர் உள்ள உக்காந்துட்டு இருக்கார். திறந்துவிடுங்க" என்று காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
நேரு கோபம்
அதற்கு காவல்துறையினர், "திமுகவில் எந்த அமைச்சருங்க இருக்காங்க. ஏங்க போலீஸ்கிட்ட வந்து வம்பு பண்ணறீங்க" என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய நேரு, "சாப்பிடறவங்களை ஏன்யா தொந்தரவு பண்ணறீங்க. அங்க அவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஆகிட்டு இருக்கு. அதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாப்பிட கூட விடாம அநியாயம் பண்ணறீங்க" என்று கேட்டார்.
இதேபோல ஆ. ராசா, "வண்டி போகட்டும் விடுங்கய்யா. முதலமைச்சர் அந்த பக்கம் போயிட்டாரு. நாங்க இந்த பக்கம் சாப்பிட போறோம். சாப்பிட கூட விடாமல் தடுக்கிறார்கள். இது என்ன சட்டம் என தெரியவில்லை" என்று கூறினார். இதன் பிறகு காவல்துறையினர் பேரிகார்டை விலக்கி, அவர்கள் வந்த கார் செல்வதற்கு அனுமதித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
